கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிக்கும் இறைமக்கள்
“நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.”
— யோவான் 15:14

அன்பிற்குரிய இறைமக்களே, இயேசு கிறிஸ்து தமது சீடர்களுடன் இருந்த இறுதி நேரத்தில் கூறிய வார்த்தைகளில் ஒன்றுதான் இந்தப் பகுதி. பிரிவின் நேரத்தில் ஒருவர் பேசும் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. இயேசு தமது சீடர்களிடம் உலக வெற்றியைப் பற்றியோ, பதவியைப் பற்றியோ பேசவில்லை. “நான் உங்களில் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்புகூருங்கள்” என்று கூறினார். இயேசுவின் பார்வையில், அவருடைய சீடர்களை உலகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் மிகப்பெரிய அடையாளம் அன்பு. நாம் எவ்வளவு வேதாகமத்தை அறிந்திருக்கிறோம் என்பதைக் காட்டிலும், கிறிஸ்துவின் அன்பு நமது வாழ்க்கையில் எவ்வளவு வெளிப்படுகிறது என்பதே முக்கியம். இயேசு, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் பெரிய அன்பு ஒருவரிடத்திலுமில்லை” என்று கூறுகிறார். இது சாதாரண அன்பைப் பற்றிய வார்த்தை அல்ல. தம்முடைய சிலுவைத் தியாகத்தை முன்னறிவித்த வார்த்தைகள். கிறிஸ்துவின் அன்பு வார்த்தைகளில் மட்டும் வெளிப்படவில்லை; அது தியாகத்தில் வெளிப்பட்டது. கல்வாரியில் இயேசு தமது ஜீவனையே நமக்காகக் கொடுத்தார். நாம் தகுதியானவர்கள் என்பதற்காக அல்ல; அவர் அன்பானவர் என்பதற்காக. எனவே கிறிஸ்துவின் அன்பைப் பெற்ற நாம், அந்த அன்பை மற்றவர்களிடம் பிரதிபலிக்க வேண்டும். அதனால்தான் இயேசு, “நான் உங்களை இனி ஊழியக்காரர்கள் என்று சொல்லுகிறதில்லை... உங்களைச் சிநேகிதர் என்றேன்” என்கிறார். ஊழிக்காரன் கட்டளையைப் பின்பற்றுவான்; ஆனால் நண்பன் இருதயத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவான். ஆகவே கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதல் என்பது பயத்தினால் செய்யப்படும் கடமை அல்ல; அன்பினால் வரும் கீழ்ப்படிதல். நாம் அவரை நேசிப்பதால் அவர் சொல்வதைச் செய்கிறோம். அவர் அன்பை அனுபவித்ததால் பிறரிடம் அன்பு காட்டுகிறோம். அவர் நம்மை மன்னித்ததால் நாமும் மன்னிக்கிறோம். அவர் நமக்காகத் தம்மையே கொடுத்ததால் நாமும் பிறருக்காக நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும், அக்கறையையும் கொடுக்கிறோம். மேலும், நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்” என்று இயேசு கூறுகிறார். நம்மைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம் நம்முடைய தனிப்பட்ட உயர்வு மட்டுமல்ல; நாம் அவருக்குள் கனிகொடுக்க வேண்டும் என்பதே. அந்தக் கனி நம்முடைய வாழ்க்கையில் நாம் காண்பிக்கும் அன்பில், தியாகத்தில், சேவையில், பிறருடைய கண்ணீரைத் துடைப்பதில் , விழுந்தவரை எழுப்புவதில், மனம் உடைந்தவருக்கு ஆறுதல் கூறுவதில் வெளிப்படும். உலகம் நம்மை வெறுத்தாலும், நாம் கிறிஸ்துவின் அன்பைத் தொடர்ந்து பிரதிபலிக்க வேண்டும். ஏனெனில், உலகத்தின் வெறுப்புக்கு நாம் வெறுப்பால் பதிலளித்தால், கிறிஸ்துவின் சாட்சியை இழந்துவிடுகிறோம்; அன்பால் பதிலளித்தால், கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோம். ஒரு கண்ணாடி தன்னுடைய ஒளியை உருவாக்குவதில்லை; அதன்மேல் விழும் ஒளியைப் பிரதிபலிக்கிறது. அதுபோல நாமும் கிறிஸ்துவின் அன்பை இந்த உலகில் பிரதிபலிப்பவர்கள்.
அன்பிற்குரியவர்களே,
கிறிஸ்து நம்மைத் தமது சிநேகிதர்களாக அழைத்திருக்கிறார். அவர் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் தமது அன்பை நமக்குக் கொடுத்திருக்கிறார். இப்போது அந்த அன்பை உலகத்திற்குக் கொண்டு செல்லும் மாபெரும் பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆகவே, கிறிஸ்துவின் அன்பைப் பற்றி பேசுகிற இறைமக்களாக மட்டும் இல்லாமல், கிறிஸ்துவின் அன்பை நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுத்தி அனுபவிக்கும் இறைமக்களாக வாழ்வோம். நம்முடைய வார்த்தைகளில் கிறிஸ்துவின் அன்பு இருக்கட்டும். நம்முடைய செயல்களில் கிறிஸ்துவின் அன்பு இருக்கட்டும். நம்முடைய பணிவிடையில் கிறிஸ்துவின் அன்பு இருக்கட்டும். அப்போது நம்முடைய வாழ்க்கை நற்செய்தியாகவும், நம்முடைய அன்பு சாட்சியாகவும், கிறிஸ்துவை வெளிப்படுத்தும் கண்ணாடியாகவும் மாறும்.