அருட்பணிக்காக ஆவியை அருளும் ஆண்டவர்
“அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன்மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.”
— எண்ணாகமம் 11:17

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற இஸ்ரவேல் மக்கள், தேவன் வாக்களித்த கானானை நோக்கி சென்ற வனாந்தர பயணத்தின் சிரமங்களும், உணவுக்கான ஏக்கமும், தொடர்ந்து எழுந்த முறுமுறுப்புகளும் மோசேயின் இதயத்தை உடைத்து மாபெரும் சோர்வை ஏற்படுத்தியது. “இந்தச் சகல ஜனங்களையும் சுமக்கிறதற்கு என்னால் முடியவில்லை என்று மோசே கர்த்தரிடம் தன் வேதனையை சொன்னபோது மோசேயின் சோர்வை தேவன் கண்டார். அவர் அவரைக் கண்டிக்காமல், “நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடே பேசி” என்று கூறுகிறார். தம் ஊழியக்காரனின் கண்ணீரையும் வரம்பையும் அறிந்த தேவன், அவரைத் தனியாகப் பாரத்தைச் சுமக்க விடவில்லை. எழுபது மூப்பர்களை ஏற்படுத்தி, மோசேயின் மேல் இருந்த ஆவியை அவர்கள்மேலும் வைப்பதாக வாக்களித்தார். இதிலே அருட்பணியின் ஆழமான இரகசியம் வெளிப்படுகிறது, தேவன் பணியை மட்டும் கொடுப்பதில்லை, அந்தப் பணியை நிறைவேற்றத் தேவையான தம் ஆவியையும் அருளுகிறார். அருட்பணி மனித திறமையால் மட்டும் நிறைவேறுவதில்லை; பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமும், வழிநடத்துதலும், தாங்கும் கிருபையும் தேவை. மேலும், தேவன் ஒருவரை மட்டும் பயன்படுத்துவதில்லை. ஒருவருடைய பாரத்தை மற்றவர்கள் பகிர்ந்து சுமக்கும்படி ஆவியைப் பகிர்ந்து கொடுக்கிறார். ஆகவே, அருட்பணி என்பது தனிமனிதனின் சாதனை அல்ல, ஆவியானவரால் ஒன்றிணைக்கப்பட்ட பல அருட்பணியாளர்கள், இறைமக்கள் மற்றும் பங்காளர்களின், கூட்டு அர்ப்பணிப்பு. இன்றும் தேவன் தம் சபையிலும் அருட்பணியிலும் மனிதர்களை எழுப்புகிறார். அவர் நம்மிடம், நீ மட்டும் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று கூறுவதில்லை; மாறாக, “என் ஆவியை உன்மேலும், உன்னோடு பணியாற்றுகிறவர்கள்மேலும் வைப்பேன்” என்று உறுதியளிக்கிறார். எனவே, அருட்பணியில் நாம் சோர்ந்துபோகும்போது நம்முடைய பலத்தை அல்ல, ஆண்டவர் அருளும் ஆவியை நம்புவோம். நம்முடைய பாரத்தை அவர் அறிந்திருக்கிறார்; நம்முடைய வரம்புகளையும் அவர் அறிந்திருக்கிறார். தம் பணிக்காகத் தேவையான மனிதர்களையும், தம் ஆவியின் வல்லமையையும் அவர் சரியான நேரத்தில் அருளுவார்.
அருட்பணியை செய்ய அழைத்தவர், அருட்பணிக்குத் தேவையான ஆவியையும் அருளுகிறார். நாம் தனியாகச் சுமப்பவர்கள் அல்ல; அவருடைய ஆவியால் தாங்கப்பட்டு, அவருடைய ஆவியால் பிறரைத் தாங்க அழைக்கப்பட்டவர்கள்.
கர்த்தரை ஆராதிக்கும் இறைமக்கள் அனைவரும் அருட்பணியாளர்களே, திருமுழுக்கு, திடப்படுத்தல் மூலம் அவருடைய ஐக்கியத்தில் இணைக்கப்பட்ட நாம், அவருடைய ஆவியை பெற்றவர்களாக அருட்பணியை செய்வதற்கும் அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.