விசுவாசியா? சீடனா?
“தேவவசனம் விருத்தியடைந்தது. சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று. ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.”
— அப்போஸ்தலர் 6:7

ஆதி திருச்சபையில் முணுமுணுப்பும் பிரச்சனையும் எழுந்தபோது, அப்போஸ்தலர்கள் அதை புறக்கணிக்கவில்லை. ஆவியானவரால் நிரப்பப்பட்ட ஞானமுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டு, சபையின் ஐக்கியத்தையும் ஊழியத்தையும் காத்தார்கள். அதன் விளைவாக தேவவசனம் எங்கும் பரவியது சீஷர்களின் எண்ணிக்கையும் பெருகியது. விசுவாசி என்பவர் கிறிஸ்துவை நம்புகிறவர்; சீடன் என்பவர் கிறிஸ்துவை நம்புவதோடு, கிறிஸ்துவின் வழியில் நடக்கத் தன்னை அர்ப்பணிப்பவர். விசுவாசம் கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது; சீடத்துவம் கிறிஸ்துவைப்போல வாழ்வது. விசுவாச கூட்டத்திற்கு உள்ளே பிரச்சனைகள் எழும் போது முணுமுணுப்பவர்களாக அல்ல, பொறுப்பை ஏற்றுக்கொண்டு சபையைக் கட்டியெழுப்புகிறவர்களாக இருப்போம். தேவவசனம் நம்மில் பெருகும்போது, நமது எண்ணங்கள் மாறும்; அணுகுமுறை மாறும்; வாழ்க்கை மாறும். விசுவாசிகளின் கூட்டமாக மட்டும் அல்லாமல், கிறிஸ்துவின் குணத்தை வெளிப்படுத்தும் சீடர்களின் கூட்டமாக நாம் வளர நம்மை ஒப்புக்கொடுப்போம். இன்றைய காலகட்டத்தில், சபை பெருக வேண்டியது வெறும் "விசுவாசிகளின் எண்ணிக்கையில்" மட்டுமல்ல; மாறாக, கிறிஸ்துவின் சீடர்களாக உருமாறும் "சீடர்களின் வளர்ச்சியில்தான்" திருச்சபையின் உண்மையான எழுப்புதல் அடங்கியுள்ளது.
நம்மை வெறும் விசுவாசிகளாக மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், கிறிஸ்துவின் முழுமையான சீடர்களாக மாற்ற நம்மை அர்ப்பணிப்போம். நம் மூலமாக தேவவசனம் விருத்தியடைந்து, அநேகர் சீடர்களாக எழும்பிடக் கர்த்தர் நம்மைப் பயன்படுத்துவாராக.