Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
2 அக்டோபர் 2026 வெள்ளி பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

குறை சொல்வதை விட்டுவிட்டு, எழுந்து கட்டுவோம்

“வாருங்கள், நாம் இனி நிந்தைக்குள்ளாகாதபடிக்கு எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம்.”

— நெகேமியா 2:17

“நாம் வெற்றி பெற வேண்டும் என்று தேவன் கேட்பதில்லை; முயற்சி செய்ய வேண்டும் என்பதையே அவர் எதிர்பார்க்கிறார், வெற்றியை அவர் தருவார்

- அன்னை தெரசா

நெகேமியாவின் நோக்கம் “சுவர் ஏன் இடிந்தது?” என்று கேள்வி கேட்பதில் இல்லை, அலங்கத்தை எப்படித் திரும்பக் கட்டுவது? என்பதில் மட்டுமே இருந்தது. நெகேமியா எருசலேமின் இடிபாடுகளைக் கண்டு, “யார் இதை இப்படி விட்டார்கள்?” என்று குற்றம் சுமத்திக்கொண்டிருக்கவில்லை, “வாருங்கள், நாம் கட்டுவோம்” என்று அழைத்தார்.

குறைகளைச் சுட்டிக்காட்டுவது எளிது; ஆனால் அந்தக் குறையைச் சரிசெய்ய எழுந்து செயல்படுவதுதான் உண்மையான பொறுப்பு. இன்றைய சமுதாயத்தில் பிறருடைய குறைகளைப் பேசுவதற்கும், அவமானப்படுத்துவதற்கும் பலர் முன்வருகிறார்கள்; ஆனால் அந்தக் குறையை மாற்றுவதற்காக தங்கள் கைகளை நீட்டத் தயங்குகிறார்கள். குறை சொல்வது நிந்தையை அதிகரிக்கலாம்; ஆனால் எழுந்து செய்வது மாற்றத்தை உருவாக்கும். நமது குடும்பத்தில் ஒரு குறை இருந்தால் அதை மட்டும் பேசாமல் சரிசெய்ய நாம் முன்வருவோம். சபையில் ஒரு குறை தெரிந்தால் குற்றம் சாட்டாமல், நமது பங்களிப்பைச் செய்வோம்.

சமுதாயத்தில் ஒரு பிரச்சினை இருந்தால் “யாராவது செய்ய வேண்டும்” என்று சொல்லாமல், “நம்மால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்போம்.

நெகேமியாவின் வார்த்தை “அலங்கத்தைக் கட்டுவோம்” என்பதே; “அலங்கம் ஏன் இடிந்தது?” என்பதல்ல.

அதுபோல, நமது வார்த்தைகள் குறைகளை பெரிதாக்குவதற்காக அல்ல, நம்பிக்கையை எழுப்புவதற்காக இருக்கட்டும். பிறரை அவமானப்படுத்தும் விரலைக் காட்டுவதற்குப் பதிலாக, கட்டியெழுப்பும் கைகளை நீட்டுவோம்.

குறை சொல்வதை நிறுத்துவோம்; குறையைச் சரிசெய்ய எழுந்து செயல்படுவோம்.

நிந்தையைப் பேசாமல், நன்மையைச் செய்வோம். இடிபாடுகளை எண்ணிக்கொண்டிருக்காமல், தேவனுடைய உதவியோடு எழுந்து கட்டுவோம்.

குடும்பத்திலும், திருச்சபையிலும், சமூகத்திலும், தேசத்திலும், இடிந்ததை சரி செய்ய நம்மால் முடிந்ததை செய்வோம். அதனை முழு மனதோடு செய்வோம்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878