பாவத்தை விட்டால்தான் உண்மையான மகிழ்ச்சி!
“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.”
— நீதிமொழிகள் 28:13
குரங்குகளைப் பிடிக்க ஒரு வித்தியாசமான முறையைப் பயன்படுத்துவார்கள். தேங்காயில் குரங்கின் கை நுழையும் அளவிற்கு ஒரு சிறிய ஓட்டை போட்டு, அதன் உள்ளே குரங்குக்குப் பிடித்த வெல்லத்தையும் பருப்பையும் போட்டு வைப்பார்கள். குரங்கு ஆசையோடு அந்த ஓட்டைக்குள் கையைவிட்டு, வெல்லத்தையும் பருப்பையும் அள்ளிக்கொண்டு கையை வெளியே எடுக்க முயற்சிக்கும். ஆனால் கையில் உள்ளதை விடாமல் இறுக்கமாகப் பிடித்திருப்பதால் கை வெளியே வராது.
அப்போது மறைந்திருப்பவர்கள் குரங்கைத் துரத்துவார்கள். குரங்கு ஓட முயற்சித்தாலும் தேங்காயை விடாததால் அதனால் வேகமாக ஓட முடியாது. இறுதியில் அது பிடிபட்டுவிடும். ஆச்சரியம் என்னவென்றால், குரங்கின் கையைப் பிடித்திருப்பது தேங்காய் அல்ல; தேங்காய்க்குள் இருக்கும் பொருளை விடாத குரங்கின் பிடிதான் அதைப் பிடிபடச் செய்கிறது. கையைத் திறந்து வெல்லத்தையும் பருப்பையும் விட்டுவிட்டால், அது உடனே தப்பித்துவிடும்.
நம்முடைய வாழ்க்கையிலும் இதுதான் நடக்கிறது. பாவம் நமக்கு சிறிய மகிழ்ச்சியைத் தருவதாகத் தோன்றலாம். ஆனால் நாம் அதை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும்போது, அதுவே நம்முடைய சமாதானத்தையும், சந்தோஷத்தையும், தேவனோடு உள்ள உறவையும் அழித்துவிடுகிறது. “பாவம் என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறது” என்று நாம் நினைக்கிறோம்; ஆனால் பல நேரங்களில் உண்மை என்னவென்றால், நாம் பாவத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.
பாவத்தை மறைப்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல. அதை நியாயப்படுத்துவதும் தீர்வு அல்ல. அறிக்கையிட்டு விட்டுவிடுவதுதான் விடுதலையின் வழி.*
அன்பானவர்களே, இன்று நம்முடைய உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று சற்று சிந்திப்போம். மன்னிக்க முடியாத மனக்கசப்பா? மறைத்து வைத்திருக்கும் தவறா? விடமுடியாத ஆசையா? தேவனுக்குப் பிரியமில்லாத பழக்கமா? உலகம் கொடுக்கும் சிறிய இன்பமாகிய நாம் பிடித்துக்கொண்டிருக்கும் அந்த ஒன்றுதான், தேவன் தர விரும்பும் பெரிய மகிழ்ச்சியை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டிருக்கலாம்.
தேங்காயை விடாத குரங்கைப்போல நாம் பாவத்தைப் பிடித்துக்கொண்டு, “எனக்கு ஏன் மகிழ்ச்சி இல்லை?” என்று கேட்கக்கூடாது. நாம் பிடித்திருப்பதை விட்டுவிடுவோம். பாவத்தை அறிக்கையிட்டு, அதை விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவின் கரங்களில் நம்மை ஒப்படைப்போம்.
நாம் பாவத்தை விட்டுவிடும் அந்த நொடியில், தேவனுடைய இரக்கம் நம்மைத் தேடி வரும்; குற்ற உணர்வுக்குப் பதிலாக மன்னிப்பும், அடிமைத்தனத்திற்குப் பதிலாக விடுதலையும், கலக்கத்திற்குப் பதிலாக சமாதானமும், போலியான இன்பத்திற்குப் பதிலாக உண்மையான மகிழ்ச்சியும் நம் வாழ்வில் பிறக்கும்.
RevC. ஜீவ ஜெய கிங்ஸ்லி