மனித அறிவின் எல்லையும் கடவுளின் முடிவில்லாத ஞானமும்
“தானியேலே, நீ இந்தக் காரியங்களைக் கடைசிகாலம் மட்டும் பூட்டப்பட்டதாகவும்... அநேகர் அங்குமிங்கும் அலைந்து ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போகும் என்றான்.”
— தானியேல் 12:4

இன்னும் ஐந்து ஆண்டுகளில் மனித இனத்தையே அழித்துவிடும் என AI தொழில்நுட்ப விஞ்ஞானிகளே கருதும் அளவிற்கு பெரும் சக்தியுடன் AI தொழில்நுட்பத்தின் அதி நவீன அளப்பெரிய வளர்ச்சிகள் வியக்கத்தக்க வேகத்தில் வந்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, AGI, குவாண்டம் கம்ப்யூட்டிங், மூளை–கணினி இணைப்பு போன்ற துறைகளில் மனிதன் தொடர்ந்து புதிய எல்லைகளைத் திறந்து கொண்டிருக்கிறான். சில நொடிகளில் மனிதனால் செய்ய முடியாத அளவுக்கு கணக்கீடுகளையும் தகவல் பகுப்பாய்வுகளையும் இயந்திரங்கள் செய்கின்றன. இத்தனை முன்னேற்றங்களுக்கிடையில் நாம் மறந்துவிடக்கூடாத ஒரு சத்தியம் இருக்கிறது, மனிதன் படைப்பை ஆராய்கிறான்; ஆனால் தேவன் படைப்பாளி. மனிதன் மூளையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள முயல்கிறான், அந்த மூளையையே உருவாக்கியவர் தேவன். மனிதன் DNA-வை ஆராய்கிறான், உயிரின் ஆதாரமான படைப்பை உருவாக்கியவர் தேவன்.
“நான் பிரமிக்கத்தக்கதாகவும் ஆச்சரியமாகவும் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்.” - சங்கீதம் 139:14
அறிவுக்கும் ஞானத்திற்கும் வித்தியாசம் உண்டு. அறிவு நமக்கு எப்படி? என்பதைச் சொல்லலாம்; ஆனால் ஞானம் எதற்காக? எந்த வழியில்? என்பதை உணர்த்துகிறது. தொழில்நுட்பம் நமது வாழ்க்கையை வேகமாக்கலாம், ஆனால் தேவனுடைய ஞானமே நமது வாழ்க்கைக்கு சரியான திசையைத் தருகிறது. வேதாகமம் கூறுகிறது: “நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா வல்லமையுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய புத்திக்கு அளவில்லை.” சங்கீதம் 147:5 மனிதன் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவுக்கு எல்லை உண்டு, தேவனுடைய ஞானத்திற்கு எல்லையே இல்லை. மனிதன் தகவலைச் சேமிக்க முடியும், ஆனால் தேவன் இருதயத்தை அறிகிறார். மனிதன் வாழ்க்கையை நீட்டிக்க முயலலாம், ஆனால் நித்திய ஜீவனை அளிப்பவர் கிறிஸ்து. அன்புக்குரியவர்களே அறிவு பெருகும் இந்தக் காலத்தில் நமது தேவபயம் குறையக்கூடாது. தொழில்நுட்பம் வளரும்போது நமது விசுவாசமும் வளர வேண்டும்.
உலகத்தை அறிய அறிவியல் உதவலாம், ஆனால் நமது வாழ்க்கையின் நோக்கத்தையும் நித்தியத்தின் வழியையும் அறிய தேவனுடைய வார்த்தையே வழிகாட்டுகிறது.
“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.” - நீதிமொழிகள் 9:10
மனித அறிவு நம்மை உயரமான இடத்திற்குக் கொண்டு செல்லலாம், ஆனால் தேவனுடைய ஞானம் மட்டுமே நம்மை சரியான இடத்திற்குக் கொண்டு செல்லும். ஆகவே, அறிவைத் தேடுவதற்கு முன்பாக ஞானத்தின் ஊற்றாகிய தேவனைத் தேடுவோம்.