அழியாத வார்த்தைகள்
“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.”
— மத்தேயு 24:35

“பல வாக்குறுதிகள் தண்ணீரால் எழுதப்பட்டுள்ளன.
இயேசுவின் வாக்குறுதிகள் மட்டுமே அவருடைய தூய இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளன.”
— பேராயர் ஞானாபரணம் ஜான்சன்
மனிதர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கும், கர்த்தர் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தண்ணீரில் எழுதப்படும் எழுத்துக்கள் அடுத்த கணமே அழிந்துவிடுவது போல, மனிதர்களின் வார்த்தைகளும் பல நேரங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிவிடுகின்றன; சில நேரங்களில் மறக்கப்படுகின்றன; சில வேளைகளில் நிறைவேற்றப்படாமலும் போகின்றன.
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகள் அப்படிப்பட்டவை அல்ல. அவை அவருடைய தூய இரத்தத்தால் எழுதப்பட்டவை. கல்வாரி சிலுவையில் தம் உயிரையே அர்ப்பணித்து உறுதிப்படுத்தப்பட்டது. தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வல்லவராகவும் உண்மையுள்ளவராகவும் இருக்கிறார்.
நாம் நம்பிக்கையிழக்கும் தருணங்களிலும், அவர் கொடுத்த வாக்குறுதி நமக்காக நிலைத்திருக்கிறது.
நாம் நம்பிய மனிதர்கள் மாறியிருக்கலாம்; எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகியிருக்கலாம்; நமது சூழ்நிலைகள் நம்பிக்கையற்றதாகத் தோன்றலாம். ஆனால், தேவன் தம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவர்.
“வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்; ஆகையால் நம்முடைய நம்பிக்கையை அசைவில்லாமல் பற்றிக்கொண்டிருப்போமாக.”
— எபிரேயர் 10:23
இயேசுவின் வாக்குறுதிகள் நம்முடைய சூழ்நிலைகளைப் பார்த்து மாறுவதில்லை. நாம் பலவீனமாக இருக்கும்போதும் அவர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார். நாம் கண்ணீரில் நடக்கும்போதும் அவர் நம்மை விட்டு விலகுவதில்லை. மனிதர்கள் நம்மை ஏமாற்றினாலும் நம்பிக்கை வைத்தவர்கள் நம்மைக் கைவிட்டாலும் கிறிஸ்துவின் வார்த்தை மட்டும் ஒருபோதும் தோல்வியடையாது.
எனவே, மனிதர்களின் மாறக்கூடிய வார்த்தைகளைப் பார்த்து சோர்ந்துபோகாமல், கல்வாரி இரத்தத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவின் அழியாத வாக்குறுதிகளைப் பற்றிக்கொள்வோம்.
அவருடைய ஒவ்வொரு வாக்குறுதியும் விலையற்ற வார்த்தையல்ல; அதன் பின்னால் சிலுவையின் தியாகம் இருக்கிறது. நம்முடைய இரட்சிப்பிற்காக தம் உயிரையே கொடுத்தவர், தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறமாட்டார்.
ஜெபம்
1. வாழ்வில் நம்பிக்கை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் நற்செய்தியின் வாயிலாக உண்மை நம்பிக்கை பெற்றுக் கொள்ள
2. நம்பிக்கையின் விதையை சமுதாயத்தில் விதைக்கும் நற்செய்தி பணியாளர்களுக்காக ஜெபிப்போம்