Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
9 செப்டம்பர் 2026 புதன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

சொல்லா? செயலா?

“என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.”

— 1 யோவான் 3:18

வாயின் வார்த்தைகளை விட, கரங்களின் செயல்களே கிறிஸ்துவை உலகிற்கு அதிக சத்தமாகப் பிரசங்கிக்கின்றன.”
— சார்லஸ் ஸ்பர்ஜன்

கிறிஸ்தவ அன்பு என்பது நம் வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், நம் செயல்களிலும் தெரிய வேண்டிய ஒன்று.

அன்பைப் பற்றி பேசுவதும், அனுதாப வார்த்தைகள் சொல்வதும் சுலபம். ஆனால், ஒருவருடைய கண்ணீரைக் கண்டு நம் கையை நீட்டுவதும், அவருடைய தேவையைப் புரிந்து உதவுவதும்தான் உண்மையான அன்பு.

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அன்பைப் பற்றி மட்டும் போதிக்கவில்லை; அன்பாகவே வாழ்ந்து காட்டினார்.

பசியோடு இருந்த மக்களுக்கு உணவு கொடுத்தார். நோயுற்றவர்களைத் தொட்டு குணமாக்கினார். தனிமையில் இருந்தவர்களை அணைத்துக்கொண்டார். ஒதுக்கப்பட்டவர்களுக்கு இடம் கொடுத்தார். துயரப்பட்டவர்களோடு கண்ணீர் சிந்தினார். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவரது செயல்களால் உண்மையானது.

அதனால்தான் யாக்கோபு, உடையும் உணவும் இல்லாத சகோதரனைப் பார்த்து, “சமாதானமாய்ப் போங்கள், பசியாறுங்கள்” என்று மட்டும் சொல்வது பயனற்றது என்று சொல்கிறார் (யாக்கோபு 2: 15,16).

பசியால் தவிக்கும் ஒருவருக்கு நல்ல வார்த்தைகள் மட்டும் உணவாகாது.

கண்ணீரில் நிற்கும் ஒருவருக்கு வெறும் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் போதாது. நம்மால் முடிந்த உதவியைச் செய்யாமல் பேசப்படும் அன்பு, இன்னும் முழுமையான அன்பாக இல்லை.

உண்மையான விசுவாசம் நம் வார்த்தைகளில் மட்டும் கேட்கப்படுவதில்லை; அது நம் வாழ்க்கையிலும் தெரிய வேண்டும்.
நாம் தேவனை நேசிக்கிறோம் என்று சொல்வது சுலபம். ஆனால், நம்மைச் சுற்றியுள்ள தேவையுள்ளவர்களை எப்படி அணுகுகிறோம் என்பதுதான் அந்த அன்புக்கான உண்மையான சாட்சி.

பசியுள்ளவருக்கு உணவு கொடுப்பது,
ஏழைக்கு உதவிக்கரம் நீட்டுவது,
துயரப்பட்டவரின் கண்ணீரைத் துடைப்பது,
தனிமையில் இருப்பவரைத் தேடிச் செல்வது,
வீழ்ந்தவரைத் தூக்கி நிறுத்துவது,
நம்பிக்கையிழந்தவருக்கு நம்பிக்கையாக இருப்பது, இவையெல்லாம் கிறிஸ்துவின் அன்பை வார்த்தைகளே இல்லாமல் சொல்லும் சுவிசேஷமாகும்.

நம் பக்தி மேடைப் பேச்சாக மட்டும் இருக்கக்கூடாது; நம் ஜெபமும் செயலில்லாத உணர்ச்சியாக இருக்கக்கூடாது. நம் கைகளே உதவி செய்யும் கைகளாக மாற வேண்டும். நம் பேசும் அன்பே, பிறர் வாழ்க்கையில் உணரப்படும் அன்பாக மாற வேண்டும்.

இன்று நம்மைச் சுற்றிலும் யாரோ ஒருவர் நம் வார்த்தைகளைக் காட்டிலும் நம் செயலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். அவர்களுடைய தேவையைப் பார்த்தும் கடந்து செல்லாமல், நம்மால் முடிந்ததைச் செய்வோம்.

அன்பு சொல்லப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல; அது செயலில் காண்பிக்கப்பட வேண்டும்.
விசுவாசம் பேசப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல; அது வாழ்ந்து காட்டப்பட வேண்டும்.
அன்புக்குரியவர்களே
“சொல்லால் மட்டும் அல்ல… செயலால் அன்புகூர்வோம்.
வார்த்தையால் மட்டும் அல்ல… உண்மையால் வாழ்வோம்.
நம் வாழ்க்கையின் மூலம் கிறிஸ்துவை வெளிப்படுத்துவோம்.

ஜெபம்

1. அருட்பணிகளை பல நிலைகளில் தாங்கும் அருட்பணி பங்காளர்களின் குடும்பங்களுக்காக

2. திருச்சபைகளுக்காக திருச்சபைகளின் சமாதானத்திற்காக

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878