சுத்தமான பாத்திரம்
“ஆகையால் ஒருவன்.... தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.”
— 2 தீமோத்தேயு 2:21

The greatest need of our day is not for more knowledge, but for more holiness.
நமது காலத்தின் மிகப்பெரிய தேவை அதிக அறிவல்ல; அதிக பரிசுத்தமே. — A. W. Tozer
கர்த்தர் நம்முடைய திறமை, பதவி, செல்வம் அல்லது புகழைக் காட்டிலும் நமது இருதயத்தின் சுத்தத்தை பார்க்கிறார். மனிதர்களிடம் மறைக்க முடிந்ததை தேவனிடம் மறைக்க முடியாது. பொறாமை, கோபம், அகந்தை, மன்னிக்காமை, பேராசை போன்றவை நம் இருதயத்தில் தங்கியிருந்தால், அவை தேவனுடைய பணியில் நம்முடைய பயன்பாட்டைத் தடுக்கின்றன. பவுல், “ஒருவன் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால்” என்கிறார். தேவனுடைய கிருபை நம்மைச் சுத்திகரிக்கிறது, ஆனால் தவறானவற்றிலிருந்து விலகுவதற்கான தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும். சுத்திகரிப்பு என்பது நம்மைத் தண்டிப்பதற்காக அல்ல, தேவனுடைய கரத்தில் நம்மைப் பயன்படுத்துவதற்காக. அழுக்கான கண்ணாடி விலை உயர்ந்ததாக இருந்தாலும், அதில் முகம் தெளிவாகத் தெரியாது. சாதாரண கண்ணாடி சுத்தமாக இருந்தால் முகம் தெளிவாகத் தெரியும். அதுபோல, நமது வாழ்க்கையில் கிறிஸ்துவின் சாயல் தெரிகிறதா என்பதை பொறுத்து தான் நம்முடைய சுத்தம் தீர்மானிக்கப்படுகிறது. தேவன் நம்மை பெரியவர்களாகப் பயன்படுத்துவதற்கு முன், சுத்தமானவர்களாக மாற்ற விரும்புகிறார். வீட்டில் பயன்படுத்தும் பாத்திரம் விலை உயர்ந்தது என்று சொல்லி அதை அழுக்கோடு பயன்படுத்துவதில்லை சுத்தப்படுத்திய பிறகு தான் அதனை உபயோகிக்க தொடங்குகின்றோம் நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள் ஆனாலும் சாதாரணமானவர்கள் ஆனாலும் சுத்தமுள்ளவர்களாய் இருப்பதையே கர்த்தர் விரும்புகிறார். நம்மை ஆராய்வோம், ஆண்டவரிடம் நம்மை ஒப்புக் கொடுப்போம் உமக்குப் பிரியம் இல்லாத அசுத்தத்தை என்னை விட்டு அகற்றி போடும், உபயோகமுள்ள சுத்தமான பாத்திரங்களாய் எங்களை பயன்படுத்தும் உயர்ந்த பாத்திரமாக அல்ல, சுத்தமான பாத்திரமாக இருந்து, உமது கரத்தில் தினமும் பயன்பட எனக்கு கிருபை தாரும் என்று கேட்போம்.
ஜெபம்
1. ஆண்டவரின் பணியை செய்வதற்கு அர்ப்பணம் உள்ள அருட்பணியாளர்கள் தேவை. மிஷனரி பணிகாய் தங்களை அர்ப்பணித்த அருட்பணியாளர்கள் கிடைக்க ஜெபிப்போம்.
2. அக்டோபர் மாதம் 17 முதல் 19 வரையிலும் நடைபெறும் விசுவாசிகள் ஐக்கிய முகாம் சிறப்பாக நடைபெற ஜெபிப்போம்.