மத்தியானத்தைப் போல் ஆகும் அந்தகாரம்
“பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.”
— ஏசாயா 58:10
செயலற்ற ஜெபம் வெறும் வார்த்தை; ஜெபமற்ற செயல் வெறும் சுயநலம். இரண்டும் இணையும்போதே வெளிச்சம் பிறக்கிறது."
— ஜான் வெஸ்லி (John Wesley)
"இருளைத் திட்டிக்கொண்டிருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவது மேல்" என்பார்கள்.
ஆனால், ஏசாயா தீர்க்கதரிசியின் வாயிலாகக் கர்த்தர் தமது மக்களுக்கு உணர்த்தும் ஆழமான செய்தி நீ வெறும் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பதை விட, நீயே பிறருக்கான மெழுகுவர்த்தியாய் உருகி ஒளி வீசு என்பதுதான்.
தன்னலம் மறந்து, பிறர் நலம் நாடும் நல்மனங்களுக்குக் இறைவன் அளிக்கும் மகத்தான வாக்குத்தத்தம்
வெறும் வெளிச்சம் உதிப்பது மட்டுமல்ல, அவர்களது அந்தகார இருளே மத்தியானத்தைப் போல் மாறுவதுதான்.
மதிய நேர வெளிச்சம் என்பது மற்ற நேரத்து வெளிச்சங்களை விட முற்றிலும் வேறுபட்டது, தனித்துவமானது.
சாதாரண வெளிச்சத்தில் நமது நிழல் நமக்கு முன்பாகவோ அல்லது பின்னாலோ நீண்ட இருளாய் விழும்.
ஆனால், நண்பகல் சூரியன் உச்சிக்கு வரும்போது, நமது நிழல் கூட நமக்குக் கீழே சுருங்கிப்போய் மறைந்துவிடும்.
நிழலில் கூட இருளற்ற, எந்தவொரு தெளிவின்மையும் இல்லாத பூரண வெளிச்சத்தை நமக்குத் தரவே ஆண்டவர் விரும்புகிறார்.
இந்த அரிய ஒளி, சுயநலச் சிறைக்குள் வாழ்பவர்களுக்குக் கிடைப்பதில்லை.
பிறரின் பசியறிந்து, ஒடுக்கப்பட்டோரின் துயரம் கண்டு, அவர்களுக்காகத் தன் ஆத்துமாவைச் சாய்க்கும் தியாக உள்ளங்களுக்கு மட்டுமே இந்த நண்பகல் ஒளி சொந்தமாகிறது.
நாம் பிறருடைய வாழ்க்கையின் இருளைப் போக்க நம்மையே மெழுகுவர்த்தியாய் கரைக்கும்போது, நம் சொந்த வாழ்வைச் சூழ்ந்திருக்கும் எந்தவொரு காரிருளும் நிலைக்குத்துப் போய்விடும்.
நம் வாழ்வின் அந்தகாரம் விலகி, அது நண்பகல் சூரியனைப் போல சுடரொளி வீசும்.
உன் கைகள் பிறருக்கு உதவி செய்யும்போது, அது ஜெபத்தில் கூப்பும் கரங்களை விடப் பரிசுத்தமானது."
— டி.எல். மூடி
ஜெபம்
நமது UCMSI அருட்பணி இயக்கத்தின் வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பசியாற்றும் திருப்பணிகள், முதியோர் பராமரிப்பு அருட்பணிகள், ஏழைகளுக்கான உதவும் கரங்கள் திட்டங்கள், மருத்துவமனை அருட்பணிகள், எதிர்பாராத பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு செய்யப்படும் உதவி அருட்பணிகள் அனைத்துக்காகவும் ஜெபிக்க அன்பாய் வேண்டுகிறோம்.