தாழ்மை : கிறிஸ்துவே மாதிரி
“நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.”
— யோவான் 13:15
தாழ்மை என்பது தன்னைப்பற்றித் தாழ்வாக நினைப்பது அல்ல; மாறாக, தன்னைப்பற்றியே நினைக்காமல் இருப்பது."
— சி.எஸ். லூயிஸ்»
உலகம் உயர்ந்து நிற்பவர்களைப் பாராட்டுகிறது; ஆனால், தேவன் தாழ்ந்து சேவை செய்பவர்களைப் போற்றுகிறார்.
பலர் "நான் மற்றவர்களை விட உயர்ந்தவன்" என்பதை நிரூபிப்பதற்காக வாழ்கிறார்கள். ஆனால், உண்மையான மகத்துவம் அதிகாரத்தில் இல்லை; அன்போடு குனிந்து சேவை செய்வதில்தான் உள்ளது.
அனைத்திற்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, சீடர்களின் பாதங்களைக் கழுவி, சேவையே தலைமைத்துவத்தின் உச்சம் என்பதைத் தமது வாழ்வால் வெளிப்படுத்தினார். அவர் சொன்னதைக் கற்பித்தவர் மட்டுமல்ல; அவர் கற்பித்ததை வாழ்ந்து காட்டியவரும் ஆவார். அதனால் அவரைப் பின்பற்றிய சீடர்களும் தாழ்மை, அன்பு, தியாகம் நிறைந்த வாழ்க்கையின் மூலம் உலகை மாற்றினர்.
தன்னை உயர்த்திக்கொள்ளும் மனம் இருக்கும் இடத்தில் சமாதானம் நிலைக்காது.
குடும்பத்தில் ஒருவர் தன்னை உயர்ந்தவராக நினைத்தால் அன்பு குறையும்;
திருச்சபையில் ஒருவர் தன்னை மற்றவர்களைவிட பெரியவர் என்று எண்ணினால் ஐக்கியம் சிதையும்;
சமூகத்தில் ஒருவர் தன்னை மேலானவன் என்று உயர்த்திக்கொண்டால் பிரிவினையும் பகையும் பெருகும்.
ஆனால், கிறிஸ்துவின் மாதிரி வேறுபட்டது.
தன்னை உயர்த்துகிறவன் மனிதர்களின் பாராட்டைப் பெறலாம்; தன்னைத் தாழ்த்துகிறவன் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறுவான்.
தாழ்மை இருக்கும் இடத்தில் அன்பு மலரும்,
அன்பு இருக்கும் இடத்தில் சமாதானம் நிலைக்கும்,
சமாதானம் இருக்கும் இடத்தில் கிறிஸ்து மகிமைப்படுவார்.
கிறிஸ்துவின் உண்மையான சீடன், பிறரை விட உயர்ந்து நிற்க நினைப்பவர் அல்ல,
பிறருக்காகத் தாழ்ந்து சேவை செய்பவரே.
சீடராக அழைக்கப்பட்டிருக்கின்றோம் நமது அழைப்பை உணர்ந்து கிறிஸ்துவின் அடிபணிந்து தாழ்மையுடன் அருட்பணிகளை செய்வோம்.