Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
22 ஜூன் 2026 திங்கள் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

சுய பரிசோதனை

“ஐயோ! நான் அதமானேன்”
(ஏசாயா 6:5)

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆண்டவருக்கு முன்பாக சேராபீன்கள், சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று ஓயாமல் முழங்கிக் கொண்டிருந்ததை கண்ட ஏசாயா தீர்க்கதரிசி
அந்தப் பரிசுத்தத்தின் மகிமைக்கு முன்பாக நின்றபோது, தன்னைப்பற்றிய ஒரு மாபெரும் உண்மையை உணர்ந்தார்.

அவர், “ஐயோ நான் அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசம்பண்ணுகிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே” என்று கதறினார்.

இதற்கு முன்பு ஏசாயா பலருடைய குறைகளைக் கண்டார்; சமுதாயத்தின் பாவங்களைக் கடிந்து கொண்டார். ஆனால், தேவனுடைய பரிசுத்தத்தின் முன்னிலையில் நின்றபோது, பிறருடைய குறைகள் அல்ல, தன்னுடைய குறைகளே அவருக்குத் தெரிந்தன.

தேவனுடைய சந்நிதி மனிதனைத் தன்னைத்தானே ஆராயச் செய்கிறது.

பிறரை நியாயந்தீர்க்கும் மனதைவிட, சுயபரிசோதனை செய்யும் இதயத்தையே அது உருவாக்குகிறது.

ஏசாயாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம், அவர் தேவனைப் பார்த்த தருணத்தில் மட்டுமல்ல; தன்னை உணர்ந்த தருணத்தில்தான்.
ஆனால், ஏசாயாவின் அழுகை அங்கே முடிவடையவில்லை பலிபீடத்திலிருந்து எடுக்கப்பட்ட நெருப்புத்தண்டு அவரது உதடுகளைத் தொட்டது.

“உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது” என்ற கிருபையின் சத்தம் ஒலித்தது.

மனிதன் தன் குறையைத் தாழ்மையோடு உணரும்போது, தேவன் தனது மகா கிருபையை வெளிப்படுத்துகிறார்.

இன்று நாமும் ஏசாயாவைப் போல தேவனுடைய திருமுன் நிற்கும்போது, பிறரின் தவறுகளைக் காண்பதை விட்டுவிட்டு நம்முடைய சொந்த வாழ்க்கையை ஆராய்வோம்.

“ஐயோ! நான் அதமானேன்” என்று உடைந்த இதயத்தோடு மனந்திரும்பும் மனிதனை தேவன் ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

நம்மை அவர் குற்ற உணர்வில் தள்ளுவதில்லை, மாறாகக் கிருபையினால் உயர்த்துகிறார்.

“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதிமொழிகள் 28:13)

நம்முடைய இருதயத்திற்குள் தேவனுடைய ஒளியானது பிரகாசிக்கும்போதுதான், அங்கே மறைந்திருக்கும் அசுத்தங்களும் தூசிகளும் நமக்குத் தெளிவாகத் தெரியவருகின்றன.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878