தேடல்
“தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”
— லூக்கா 12:31
பறவைகளையும் பூக்களையும் சுட்டிக்காட்டி இயேசு ஒரு பெரிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார். யோபுவும் மிருகங்கள், பறவைகள், பூமி ஆகியவற்றை விசாரித்துக் கேள் என்கிறார். படைப்புகள் அனைத்தும் ஒரே உண்மையை அறிவிக்கின்றன: படைப்புகளை அல்ல, படைத்தவரைத் தேடு.
நம் வாழ்க்கை முழுவதும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் பெரும்பாலும் நாம் தேவனைவிட தேவன் தரும் ஆசீர்வாதங்களையே தேடுகிறோம்.
உணவு, உடை, செல்வம், பாதுகாப்பு ஆகியவை வாழ்க்கையின் இலக்காக அல்ல; தேவன் தரும் கூடுதல் ஆசீர்வாதங்களாக இருக்க வேண்டும்.
தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவது என்பது அவருடைய ஆளுகைக்கு நம்மை ஒப்புக்கொடுத்து, அவருடைய சித்தத்திற்கும் நீதிக்கும் முதலிடம் கொடுப்பதாகும்.
நாம் தேவனுடைய ராஜ்யத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் பிறருக்கு ராஜ்ஜியத்தை காண்பிப்பதையும் முன்னுரிமையாக்கும்போது, நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவதை அவர் பொறுப்பேற்றுக்கொள்கிறார்.
உலகம் "இவைகளைத் தேடு" என்கிறது; இயேசு "என்னுடைய ராஜ்யத்தைத் தேடு" என்கிறார்.
நாம் எதைத் தேடுகிறோமோ அதுவே நம் வாழ்க்கையின் தரத்தையும் திசையையும் தீர்மானிக்கிறது.
தேவனைத் தேடுவோம்; தேவையானவைகள் நம்மைத் தேடி வரும்.
தேவனைத் தேடுகிறவன் எதையும் இழப்பதில்லை; தேவனை இழந்தவன் எதைக் கண்டடைந்தாலும் பயனில்லை.