பலவீனத்தில் பலன்
வேதப் பகுதி: 2 கொரிந்தியர் 12:1-10
“அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.”
— 2 கொரிந்தியர் 12:10

பலவீனம் நம்முடைய முடிவு அல்ல; தேவனுடைய வல்லமையை அனுபவிக்கும் புதிய தொடக்கமாக இருக்கலாம்.
நம்முடைய பலவீனங்கள் நம்முடைய தோல்வியின் அடையாளங்கள் அல்ல; அவை தேவனுடைய வல்லமை வெளிப்படும் வாயில்களாகும். அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய பலவீனங்களை மறைக்கவோ, அவற்றைக் குறித்து முறுமுறுக்கவோ இல்லை. மாறாக, கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தைகளையும் நெருக்கங்களையும் துன்பங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.
ஏனெனில், தன்னுடைய மனிதப் பலம் முடிவடையும் இடத்தில்தான் தேவனுடைய வல்லமை செயல்படத் தொடங்குகிறது என்பதை அவர் அறிந்திருந்தார்.
நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் பெலவீனங்கள், தோல்விகள், நெருக்கடிகள் நம்மைச் சோர்வடையச் செய்யலாம். ஆனால், அவற்றின் மத்தியில் நம்முடைய பார்வையைப் பிரச்சினைகளின்மேல் வைக்காமல், நம்மைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவின்மேல் வைக்கும்போது, பலவீனத்திலும் வெற்றிகரமாக வாழ முடியும்.
நம்முடைய பலவீனங்களைக் குறித்து வெட்கப்படாமல், அவற்றை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுப்போம். நம்மால் முடியாத இடத்தில் அவரால் முடியும்; நம்முடைய பெலன் குறையும் நேரத்தில் அவருடைய கிருபை நம்மைத் தாங்கும்.
ஜெபம்
அன்புக்குரியவர்களே… நமது பலன் குறைந்து போகும் நேரங்களில் ஆண்டவரிடம் சொல்லுவோம்: “பலவீனங்களில் உமது வல்லமை விளங்கச் செய்யும். நெருக்கங்களின் மத்தியிலும் சோர்ந்துபோகாமல், உமது கிருபையைச் சார்ந்து வாழ உதவும். எங்கள் பலவீனங்களை உமது வல்லமையின் சாட்சிகளாக மாற்றும்.” நிச்சயமாக அவர் நம்மைப் பலப்படுத்துவார்.