பொய்யை நாடுதல்
“மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள்.”
— சங்கீதம் 4:2

மனிதன் எதைத் தேடுகிறானோ, அதுவே அவனுடைய இருதயத்தின் உண்மையான நிலையை வெளிப்படுத்துகிறது. சங்கீதக்காரரின் வாயிலாக பரிசுத்த ஆவியானவர் எழுப்பும் கேள்வி இன்றும் நம்மை நோக்கி ஒலிக்கிறது: “எதுவரைக்கும் பொய்யை நாடுவீர்கள்? இங்கு “பொய்யை நாடுதல்” என்பது வெறுமனே பொய் பேசுவதைக் குறிக்கவில்லை. தேவனை விட்டு விலகி, நிலையற்ற உலகக் காரியங்களில் வாழ்க்கையின் பாதுகாப்பையும் திருப்தியையும் தேடுவதையும் குறிக்கிறது. பணம், சொத்து, பதவி, புகழ், மனித அங்கீகாரம், உலக இன்பங்கள் இவை அனைத்தும் தேவன் இல்லாமல் நமக்கு முழுமையான நிறைவைத் தரும் என்று நம்புவது ஒரு மாயை. உலகம் நமக்கு பலவற்றை வாக்களிக்கிறது; ஆனால் அவற்றில் எதுவும் நிலையான சமாதானத்தைத் தர முடியாது. இன்று நம்மை உயர்த்துவது நாளை நம்மை விட்டு விலகலாம். இன்று நம்மை மகிழ்விப்பது நாளை நம்மை ஏமாற்றலாம். ஆனால் தேவன் தரும் சமாதானமும் மகிழ்ச்சியும் சூழ்நிலைகளைச் சார்ந்தவை அல்ல; அவை அவருடைய பிரசன்னத்திலிருந்து வருகின்றன.
அதனால்தான் தாவீது,
பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்,
சங்கீதம் 4:3 என்கிறார்.
உலகத்தின் பார்வையில் நமது மதிப்பு எவ்வளவு என்பது முக்கியமல்ல; தேவனுடைய பார்வையில் நாம் யார் என்பதே முக்கியம்.
நாம் உண்மையிலேயே எதைத் தேடுகிறோம்? நமது பாதுகாப்பு எதில் இருக்கிறது? நமது மகிழ்ச்சியின் ஆதாரம் எது? அழியக்கூடிய உலகப் பொருட்களிலா, அல்லது அழியாத தேவனிடமா? “மனுபுத்திரரே, எதுவரைக்கும்?” என்ற கேள்வி இன்று நமது இருதயத்திலும் ஒலிக்கட்டும். பொய்யான நம்பிக்கைகளை விட்டு, உண்மையான தேவனை நாடுவோம். உலகம் தர முடியாத சமாதானத்தையும், உலகம் பறிக்க முடியாத மகிழ்ச்சியையும் தேவனிடத்தில் தேடுவோம்.
நாம் தேவனைத் தேடும்போது, அவர் நம்முடைய வெறுமையைத் தமது பிரசன்னத்தால் நிரப்புவார். உலகம் தரும் மகிழ்ச்சி காலத்தால் மாறலாம்; ஆனால் தேவன் தரும் சந்தோஷம் நமது இருதயத்தை நிலைநிறுத்தும்.
பொய்யை நாடாமல், சத்தியமான தேவனை நாடுவோம்;
நிலையற்றவற்றைப் பற்றிக்கொள்ளாமல், நிலையான கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வோம்.