Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
7 செப்டம்பர் 2026 திங்கள் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்

“இதோ, நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.”

— எசேக்கியேல் 36:9

பாழடைந்து, வெறுமையாகக் கிடந்த இஸ்ரவேலின் மலைகளை நோக்கி கர்த்தர் இந்த வாக்குத்தத்தத்தை அளித்தார். மனித பார்வையில் பயனற்றதாகத் தோன்றிய நிலத்தையே தேவன் மீண்டும் பண்படுத்தி, விதைக்கப்பட்டு, பலன் தரும் நிலமாக மாற்றப்போகிறார். தேவனுடைய பார்வை விழும் இடத்தில் பாழடைவு நிலைத்திருப்பதில்லை; புதுவாழ்வு தொடங்குகிறது. நம் வாழ்க்கையிலும் சில காலங்கள் வறண்ட நிலத்தைப் போன்றதாக இருக்கலாம். கனியற்ற நாட்கள், காத்திருப்புகள், தோல்விகள், சோதனைகள், கண்ணீரின் பாதைகள் என எதுவாக இருந்தாலும், “நான் உங்கள் பட்சத்திலிருந்து உங்களைக் கண்ணோக்குவேன்” என்று சொல்லுகிற தேவன் நம்மோடு இருக்கிறார். அவருடைய பார்வை நம்மீது இருக்கும்போது, நமது பாழான நிலை நமது முடிவு அல்ல. தேவன் நம்மைப் பயன்படுத்துவதற்கு முன்பாக நம்மைப் பண்படுத்துகிறார். சோதனைகள் நம்மை அழிப்பதற்காக அல்ல; நம்மை ஆழப்படுத்துவதற்காக. காத்திருப்புகள் நம்மைத் தளரச் செய்வதற்காக அல்ல; தேவனில் வேரூன்றச் செய்வதற்காக. சில நேரங்களில் அவர் நம்மிடமிருந்து சிலவற்றை அகற்றுவது, நம்முள் இன்னும் சிறந்த கனிகள் வளர்வதற்காகவே. பண்படுத்துதல் என்பது தண்டனை அல்ல; அது தேவனுடைய தயாரிப்பு.

உடைதல் என்பது முடிவு அல்ல; அது விதைக்கப்படுவதற்கான ஆயத்தம். ஒரு நிலம் பண்படுத்தப்பட்ட பின்னரே அதில் விதை விழுகிறது; விதை விழுந்த பின்னரே பெருக்கம் உருவாகிறது. அதுபோல தேவன் நம்மைச் சீர்படுத்தி, நம்முடைய வாழ்க்கையைத் தம்முடைய கரங்களில் ஒரு விதையாக மாற்றுகிறார். நாம் ஆசீர்வதிக்கப்படுவது நமக்காக மட்டும் அல்ல. நம்மூலம் பிறர் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேவன் நம்மைப் பண்படுத்துகிறார். நமது குடும்பத்தில் நம்பிக்கையின் விதையாகவும், பணியிடத்தில் சாட்சியின் விதையாகவும், சமுதாயத்தில் நன்மையின் விதையாகவும், தேவனுடைய ராஜ்யத்தில் மிகுந்த கனிகளை கொடுக்கும் விதையாகவும் நம்மை அவர் விதைக்கிறார். நமது வாழ்க்கை வறண்ட நிலம்போல் தோன்றினாலும் கவலைப்பட வேண்டாம். தேவன் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் நம்மை பண்படுத்திக்கொண்டிருக்கிறார். சரியான காலத்தில் நம்மைச் சரியான இடத்தில் விதைப்பார். நாம் பண்படுத்தப்படுகிற காலத்தை வீணான காலம் என்று எண்ண வேண்டாம்; அது பெருக்கத்திற்கான ஆயத்தக் காலம். தேவனுடைய கரங்களில் பண்படுத்தப்பட்ட வாழ்க்கை, ஒருநாள் அநேகருக்கு நிழலாகவும், உணவாகவும், ஆசீர்வாதமாகவும் மாறும். நம்மை பண்படுத்துகிற தேவன், நம்மூலம் அநேகரை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்

1. மேல் பாச்சேரி பணித்தளத்தில் ஆலயம் கட்டுவதற்கான நிலம் வாங்குவதற்குரிய தேவைகள் சந்திக்கப்பட

2. இன்று நடைபெறும் அனைத்து அருட்பணிகளுக்காகவும்…

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878