ஜீவசுவாசம்
“தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.”
— ஆதியாகமம் 2:7

நாம் மண்ணும் விண்ணும் இணைந்த ஒரு தெய்வீகக் காவியம் மண்ணில் பிறந்த மனிதனுக்குள் பரலோகத்தின் சுவாசம் கலந்த அந்த நொடி, அகிலத்தின் மிக அழகிய அற்புதம் நிகழ்ந்தது. ஆதியாகமம் 2:7-இல் குறிப்பிடப்பட்டுள்ள "ஜீவசுவாசம்" என்பது வெறும் உடலியல் சுவாசம் (Oxygen) மட்டுமல்ல; அது தேவனுடைய தெய்வீக வல்லமையின், அன்பின் வெளிப்பாடு. மனிதனின் சரீரம் பூமியின் மண்ணால் உருவாக்கப்பட்டது. மண் தாழ்மையின் அடையாளம்; அது நம்முடைய பலவீனத்தையும், இந்த உலகத்துடனான நம் தொடர்பையும் நினைவூட்டுகிறது. நாம் எவ்வளவு உயர்ந்தாலும், நம் தொடக்கம் இந்த எளிய மண்ணில் தான் இருக்கிறது என்பதை அது நமக்குக் கற்பிக்கிறது. வெறும் மண்ணாகக் கிடந்த அந்த வடிவத்திற்குள், தேவன் தம் சொந்த நாசியிலிருந்து "ஜீவசுவாசத்தை" ஊதினார். பிரபஞ்சத்தைப் படைத்த இறைவனின் மூச்சுக் காற்று மனிதனுக்குள் பாய்ந்த கணமே, மண் உயிர் பெற்றது, மண்ணோடு விண் சங்கமித்த புள்ளி அது. கர்த்தர் நம் கற்பனைக்கு எட்டாத படைப்புகள் அனைத்தையும் தம் "உண்டாகக்கடவது" எனும் வார்த்தையினால் உண்டாக்கினார். ஆனால், மனுஷனை மட்டும் தம் கரங்களால் மண்ணினால் உருவாக்கி, அவனுக்கு மிக அருகில் வந்து அவனது நாசியில் ஜீவசுவாசத்தை ஊதினார். இது மனிதன் மேல் தேவன் வைத்துள்ள தனித்துவமான அன்பையும் நெருக்கத்தையும் காட்டுகிறது. நம் ஒவ்வொரு மூச்சிலும் தேவனுடைய சுவாசம் இருக்கிறது. எனவே, நமது வாழ்வு தற்செயலானது அல்ல; அது தேவனால் திட்டமிடப்பட்ட உன்னதமான மதிப்புடையது. பாவத்தினாலும் கவலைகளினாலும் நம் ஆவிக்குரிய வாழ்க்கை சோர்வடையும் போது, நம்மை முதலில் உருவாக்கின தேவனிடமே திரும்ப வேண்டும். அவர் மீண்டும் நம்மைத் தம் பரிசுத்த ஆவியின் சுவாசத்தால் உயிர்ப்பிக்க வல்லவர். இன்றைக்கு நம்முடைய ஒவ்வொரு மூச்சும், தேவனுடைய கிருபையின் நினைவூட்டல். பூமிக்குரிய மண்ணும், பரலோகத்திற்குரிய ஆவியும் ஒரே உடலில் இணைந்ததுதான் மனித வாழ்வு. நம் ஆத்துமா பரலோகத்தை நோக்கி உயர்த்தப்பட்டிருக்கிறது. அழியக்கூடிய மண்ணுக்குள், அழியாத தேவ ஆவி வாசம்பண்ணுகிறது.
நாம் வெறும் சாதாரண தூசி அல்ல; இறைவனின் மூச்சுக் காற்றைத் தாங்கி நிற்கும் வாழும் தேவ ஆலயம். உடல் அழியக்கூடியது, பலவீனமானது. ஆனால், நமக்குள் இருக்கும் ஜீவசுவாசம் பரலோகத்திலிருந்து வந்தது அது தெய்வீகமானது, நித்தியமானது. இந்த சுவாசம் நமக்குள் நுழைந்தபோதே சாதாரண சரீரத்திலிருந்து "ஜீவாத்துமாவாக" (உயிருள்ள ஆத்துமாவாக) நாம் மாறி இருக்கிறோம். நம்மை உயிருள்ள ஜீவ பலியாக கர்த்தருக்கு சமர்ப்பிப்பதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.