சாயல்
“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்.”
— ஆதியாகமம் 1:27

"தேவன் மனிதனைத் தம் சாயலாகப் படைத்தார் என்றால், அவன் அகத்தில் தம்மைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், உலகிற்குத் தம் அன்பைப் வெளிப்படுத்தும் கருவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே.- St. Augustine
படைப்பின் தொடக்கத்தில் இறைவன் மனிதனுக்கு வெறும் உயிரை மட்டும் கொடுக்கவில்லை; தனது சொந்த சாயலையும் கொடுத்தார். இறைச் சாயல் என்பது மனிதனின் உடலமைப்பைக் குறிப்பதல்ல; மாறாக அன்பு, இரக்கம், நீதி, மன்னிப்பு, மற்றும் படைப்பாற்றல் போன்ற இறைவனின் குணநலன்களைக் காண்பிப்பது ஆகும். மனிதனின் உண்மையான உயர்வு அவன் வைத்திருக்கும் பணம், அறிவு அல்லது அதிகாரத்தில் இல்லை. அவன் யாருடைய சாயலைச் சுமக்கிறான் என்பதில்தான் அடங்கியுள்ளது.
தேவன் மனிதனுக்குப் பூமியை ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தார். ஆளுகை என்பது அதிகாரம் அல்ல அரவணைப்பு, அக்கறையோடு பராமரிப்பது.
கீழ்ப்படுத்துதல் என்பது சீரழிப்பது அல்ல; ஒழுங்குபடுத்தி வளர்ப்பது.
பூமியும் அதில் உள்ள உயிர்களும் நமக்குச் சொந்தமானவை அல்ல; இறைவனால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டப் பொறுப்புகள்.
நாம் இயற்கையைச் சூறையாடும்போதும், எளியவர்களை ஒடுக்கும்போதும், மனித கண்ணியத்தைக் காயப்படுத்தும்போதும் நம்மில் உள்ள இறைச் சாயல் மங்கிப்போகிறது.
பசியில் இருப்பவருக்கு உதவும்போதும், அநீதியைத் தட்டிக் கேட்கும்போதும், காயப்பட்டவரைத் தேற்றும்போதும், இறை நீதியை வெளிப்படுத்தும் போதும் நம்மில் உள்ள இறைச் சாயல் பிரகாசமாக வெளிப்படுகிறது.
ஒரு ஓவியன் தான் வரைந்த ஓவியத்தில் தன் கையொப்பமிடுவது போல, இறைவன் மனிதனில் தனது சாயலைச் சுவடாகப் பதித்துள்ளார். எனவே ஒவ்வொரு மனிதனும் மதிப்பிற்குரியவன்; ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டியது.
இறைவனின் சாயலைச் சுமப்பது பெருமை; அதைப் பிரதிபலிப்பது பொறுப்பு; அதற்கேற்ப வாழ்வது பரிசுத்தமான அழைப்பு.
நமது எண்ணம், சொல், செயல், உறவுகள் என அனைத்திலும் இறைவனின் அன்பும் நீதியும் வெளிப்படுவதே உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை.
நம்மைப் படைத்த பரிசுத்தரின் சாயலை உலகில் பிரதிபலிக்கும் உண்மையான வாழ்வு வாழ்வோம் கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பார்.