Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
28 ஆகஸ்ட் 2026 வெள்ளி பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

நாம் பிரித்தெடுக்கப்பட்டவர்கள்

“நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.”

— லேவியராகமம் 20:26

கப்பல் தண்ணீரில் இருப்பது பிரச்சனை அல்ல; தண்ணீர் கப்பலுக்குள் புகுவதுதான் ஆபத்து. அதுபோல, உலகத்தில் இருப்பது பிரச்சனை அல்ல; உலகத்தன்மை ஆண்டவரால் பிரித்தெடுக்கப்பட்ட நம் உள்ளத்தில் குடியேறுவதுதான் ஆபத்து. உலகம் நம்மைத் தன்னோடு ஓட அழைக்கிறது. புகழைப் பின்தொடரச் சொல்கிறது, பணத்தைத் தேடச் சொல்கிறது, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்கிறது, சமூக வலைத்தளங்களின் அங்கீகாரத்தில் நமது மதிப்பைத் தேடச் சொல்கிறது. இப்படியாக ஓடிக்கொண்டிருக்கும்போது, “நான் யாருடையவன்? என்ற மிக முக்கியமான கேள்வியை நாம் மறந்துவிடுகிறோம்.

ஆனால் தேவன் கூறுகிறார்: “உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.”

இந்தப் பிரித்தெடுத்தல் நம்மை மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று காட்டுவதற்காக அல்ல; நாம் அவருடையவர்கள் என்பதை உணர்த்துவதற்காக. தேவன் நம்மை உலகத்திலிருந்து அகற்றி வைத்தவர் அல்ல; உலகத்தின் மத்தியில் அவருடையவர்களாக வாழ அழைத்தவர். பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை என்பது உலகத்தை வெறுப்பதல்ல, உலகத்தின் மத்தியில் இருந்து, உலகத்தின் இருளுக்கு மத்தியில் தேவனுடைய வெளிச்சமாக இருப்பது. அதனால்தான் பரிசுத்தம் என்பது உலகம் காண சிலவற்றைச் செய்யாமல் இருப்பது அல்ல. அது, “நான் தேவனுக்குச் சொந்தமானவன்; ஆகவே என் சிந்தனையும், வார்த்தையும், செயல்களும் அவருக்கே உரியவை” என்ற உணர்வோடு வாழ்வது. உலகம் நம்மைத் தன்னுடைய மாதிரியாக மாற்ற முயற்சிக்கிறது. ஆனால் வேதம் கூறுகிறது. “இந்த உலகத்திற்கு ஒத்தவேஷமிடாமல், உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”ரோமர் 12:2

நாம் உலகத்தில் வாழலாம்; ஆனால் உலகம் நமக்குள் ஆட்சி செய்யக் கூடாது. நாம் உலகத்தின் மத்தியில் நடக்கலாம்; ஆனால் உலகத்தின் போக்கில் அடித்துச் செல்லப்படக் கூடாது. நாம் அனைவரோடும் பழகலாம்; ஆனால் நமது அடையாளத்தை இழந்துவிடக் கூடாது. உலகம் என்னைத் தன்னுடையவனாக மாற்றிக்கொண்டிருக்கிறதா?

அல்லது நான் தேவனுடையவனாக வாழ்கிறேனா? நாம் உலகத்தோடு ஓடிக்கொண்டிருக்கிற கூட்டத்தில் இன்னொரு மனிதராக இருக்க அழைக்கப்படவில்லை. தேவனால் பிரித்தெடுக்கப்பட்டவர்களாக, அவருடைய சாயலைத் தாங்கி, அவருடைய வெளிச்சத்தைப் பிரதிபலிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். “நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு…”

இதுவே பிரித்தெடுக்கப்பட்டதன் ஆழமான நோக்கம்.

நாம் வேறுபட்டவர்கள் என்பதற்காக அல்ல; நாம் அவருடையவர்கள் என்பதற்காகவே வேறுபட்டவர்கள். நம்மைப் பிரித்தெடுத்த தேவனுக்கே நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம். உலகம் நம்மை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை; நம்மில் தேவனை உலகம் காண வேண்டும்.

ஜெபம்

1. தடைப்பட்டிருக்கின்ற மிட்டப்பள்ளி பணித்தள ஆலய வேலைகள் விரைவில் முடிவடைய…

2. மணிப்பூர் மாநிலத்தின் சூழல்கள் அமைதியாகி, நமது அருட்பணி இயக்கத்தின் சார்பில் அங்கு கட்டப்பட்ட ஆலயம் விரைவில் அர்ப்பணம் செய்யப்பட…

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878