அனுகூலமான துணை
“தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்.”
— சங்கீதம் 46:1-3

நேபாள தேசத்தில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும், அன்பானவர்களையும் இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்காகவும் நம் இதயம் பாரப்படுகிறது. இப்படியும் இயற்கை பேரிடர் வருமா என நம்மை அச்சம் கொள்ள செய்கிறது.
ஒரு நொடியில் வாழ்க்கை தலைகீழாக மாறலாம்; நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நிலைகுலையலாம். ஆனால் நிலையற்ற உலகத்தின் மத்தியில் நம் தேவன் மாறாத அடைக்கலம்.
நாம் தாங்க முடியாத நேரத்தில் அவர் பெலன்; நாம் தனிமையில் இருப்பதாக உணரும் நேரத்தில் அவர் அநுகூலமான துணை.
ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். என்பது நமது விசுவாசம் ஆக மாற வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரின் தைரியத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் ஜெபிப்பது நமது கடமை.
பேரழிவின் மத்தியிலும் தேவன் அருகில் இருக்கிறார்.
கண்ணீரின் மத்தியிலும் அவர் ஆறுதலாக இருக்கிறார்.
பலவீனத்தின் மத்தியிலும் அவர் பெலனாக இருக்கிறார்.
தனிமையின் மத்தியிலும் அவர் அநுகூலமான துணையாக இருக்கிறார்.
ஜெபம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவனுடைய ஆறுதலும், பாதுகாப்பும், காயங்களைத் தாங்கும் பெலனும் கிடைக்க.
மீட்புப் பணியாளர்களுக்காக ஜெபிப்போம்: அவர்களுக்கு ஞானம், தைரியம் மற்றும் பாதுகாப்பை தேவன் அருள வேண்டுவோம்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் நம் அன்பையும் கருணையையும் உணர்வுபூர்வமான ஜெபத்துடன் பகிர்ந்துகொள்வோம்.
நேபாள தேசத்தின் மீது இயேசு கிறிஸ்துவின் அன்பும், ஆறுதலும், சமாதானமும் நிறைவாக இருக்க ஜெபிப்போம்.