Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
22 ஆகஸ்ட் 2026 சனி பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

பரலோகத் துறைமுகமும் விசுவாச படமும்

“அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.”

— சங்கீதம் 107:30

வாழ்க்கை ஒரு நீண்ட கடற்பயணம் போன்றது. சில நாட்கள் அமைதியாக இருக்கும்; சில நேரங்களில் அலைகள் ஆர்ப்பரிக்கும்; சில வேளைகளில் புயல்கள் நம்மைச் சூழ்ந்து கொள்ளும். இன்றைய கலாச்சாரம், வேலைப்பளு, பொருளாதார நெருக்கடிகள், மன அழுத்தம், எதிர்கால அச்சங்கள், சமூக ஊடகங்கள் உருவாக்கும் தேவையற்ற ஒப்பீடுகள் என வாழ்க்கையின் கடலில் பல அலைகள் நம்மை நிலைதடுமாறச் செய்கின்றன. ஆனால் புயல் நமது பயணத்தின் முடிவு அல்ல; அது பயணத்தின் ஒரு பகுதி மட்டுமே. சீஷர்களின் படகில் பெருங்காற்று எழுந்தபோதும், இயேசு அவர்களோடு இருந்தார். அவர் எழுந்து, காற்றையும் கடலையும் பார்த்து, “இரையாதே, அமைதியாயிரு” என்றார்; உடனே அமைதி உண்டாயிற்று (மாற்கு 4:38–39).

இயேசு நமது வாழ்க்கைப் படகில் இருக்கிறார் என்பதற்காக புயல்கள் வராது என்று அர்த்தமல்ல; புயலின் நடுவிலும் அவர் நம்மோடு இருக்கிறார் என்பதே நமது நம்பிக்கை. அலைகள் உயரலாம்; படகு ஆடலாம்; ஆனால் இயேசு படகில் இருக்கும்போது எந்தப் புயலுக்கும் நம்மை மூழ்கடிக்கும் அனுமதியில்லை

அப்போஸ்தலனாகிய பவுல் பயணித்த கப்பல் உடைந்தபோதும், அவர்களுடைய உயிரை தேவன் காத்தார் (அப்போஸ்தலர் 27:22).

சில நேரங்களில் நமது வாழ்க்கையின் “கப்பல்” சேதமடையலாம்; வேலை போகலாம், ஒரு திட்டம் தோல்வியடையலாம், ஒரு உறவு முறியலாம், பொருளாதார இழப்பு ஏற்படலாம். ஆனால் கப்பல் சேதமடைந்ததால் பயணம் முடிந்துவிடுவதில்லை. தேவன் கப்பலைக் காப்பாற்றாமல், கப்பலில் இருப்பவரைக் காப்பாற்றும் நேரங்களும் உண்டு.

ஏனெனில் இந்த உலக வாழ்க்கை ஒரு தற்காலிகப் பயணம்; நாம் செல்ல வேண்டிய இறுதி துறைமுகம் அசைவில்லாத தேவனுடைய ராஜ்யமே (எபிரெயர் 12:28).

“அவர் புயலை அமர்த்துகிறார், அதன் அலைகள் அடங்குகிறது” (சங்கீதம் 107:29). இன்று உங்கள் வாழ்க்கையில் புயல் இருக்கலாம்; ஆனால் அது நிரந்தரமானது அல்ல. அலைகள் ஒருநாள் அடங்கும். கண்ணீர் ஒருநாள் துடைக்கப்படும். இருள் ஒருநாள் விலகும்.

எனவே, புயலைப் பார்த்து பயப்படாதீர்கள்; நங்கூரமான நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளுங்கள். இயேசுவை நம்பி உங்கள் விசுவாசப் படகை முன்னோக்கிச் செலுத்துங்கள். உங்கள் பயணத்தின் மாலுமி அவரே; உங்கள் நங்கூரம் நம்பிக்கையே; உங்கள் இலக்கு பரலோக ராஜ்யமே. அவர் உங்களை பாதியில் விட்டுவிடமாட்டார். நீங்கள் நாடின பாதுகாப்பான துறைமுகத்தில் அவர் நிச்சயமாகக் கொண்டுவந்து சேர்ப்பார்.

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878