உயரிய பங்கு
“கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும், ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.”
— புலம்பல் 3:24

உலகத்தில் உள்ள அனைத்தையும் என்னிடமிருந்து பிடுங்கிக் கொள்ளுங்கள்; எனக்குள் என்னை படைத்த கர்த்தர் இருக்கும் வரை நான் உலகிலேயே மிகவும் பணக்காரனாக இருப்பேன். - ஜான் வெஸ்லி
எரேமியா தீர்க்கதரிசி "கர்த்தர் என் பங்கு... அவரிடத்தில் நம்பிக்கை வைப்பேன்" என்று பாடியபோது, அவருடைய சூழல் வசதியானதாகவோ அமைதியானதாகவோ இல்லை, அது யூதா வரலாற்றின் மிக இருண்ட காலகட்டம். பாபிலோனிய மன்னன் நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றுகையிட்டு, கர்த்தருடைய ஆலயத்தையும் நகர மதில்களையும் தீக்கிரையாக்கி தரைமட்டமாக்கினான்.
எருசலேமுக்குள் கொடூரமான பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியால் மடிந்தனர்; தாயானவள் தன் குழந்தையைச் சமைத்து உண்ணும் அளவுக்கு பேரழிவு தலைவிரித்தாடியது.
யூதா மக்கள் கைதிகளாக பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். எரேமியா தன் சொந்த ஜனங்களாலேயே வெறுக்கப்பட்டு, கள்ளத்தீர்க்கதரிசி என முத்திரையிடப்பட்டு, சேறு நிறைந்த கிணற்றில் தூக்கி எறியப்படும் அளவுக்குக் கொடுமைகளை அனுபவித்தார். சுற்றிலும் மரண ஓலமும், இடிபாடுகளும், கண்ணீரும் மட்டுமே இருந்த அந்தச் சூழ்நிலையில்தான் எரேமியா 'புலம்பல்' புத்தகத்தை எழுதுகிறார். கண்ணெதிரே எல்லாம் அழிந்துபோனாலும், தன் ஆத்துமாவுக்குள் இருக்கும் ஆண்டவரை யாராலும் அழிக்க முடியாது என்பதை உணர்ந்தார். சொத்துக்கள், வீடுகள், ஆலயம் என அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுப்போன நிலையில், எல்லாமே போயின; ஆனால் என் கர்த்தர் என்னோடு இருக்கிறார். அவரே என் பங்கு, அதனால் நான் சோர்ந்துபோகாமல் அவரிடத்தில் நம்பிக்கை வைப்பேன்" என்று விசுவாசப் பிரகடனம் செய்தார்.
இன்று நம் வாழ்க்கையிலும் சுற்றிலும் தோல்விகள், இழப்புகள், அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பயங்கள் சூழ்ந்திருக்கலாம். மனிதர்களும் உலகச் செல்வங்களும் கைவிட்டுவிடும் தருணத்தில், எரேமியாவைப் போல இறைவனையே நம் பங்காகக் கொள்ளும்போது, எந்தவொரு இடிபாட்டிற்குள்ளும் நம்மால் நம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்க முடியும்.
மேய்ப்பராக இருந்து அரசனாக உயர்த்தப்பட்ட தாவீதின் அசைக்க முடியாத விசுவாச வார்த்தை கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர், என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். (சங்கீதம் 16:5) எந்த சூழலிலும் கர்த்தரை பங்காக கொண்டவர்கள் அசைக்கப்பட்டு போவதில்லை. உயரிய செல்வமான கர்த்தரை பங்காக கொள்வோம் உலகிலேயே நாம் தான் செல்வந்தர்கள்.