Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
13 ஆகஸ்ட் 2026 வியாழன் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

எலும்புகள்: கர்த்தரால் உயிர் பெறட்டும்

“கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு; அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.”

— நீதிமொழிகள் 3:7–8

வெறும் எலும்புக்கூடாக நிற்கும் மனித உருவம் பார்ப்பதற்கு விகாரமாகவும், பலவீனமாகவும் தோன்றும். ஆனால், அந்த எலும்புகளைச் சுற்றி அமையும் “ஊன்” தான் சரீரத்திற்கு முழுமையான வடிவத்தையும், வலிமையையும், அழகையும் கொடுக்கிறது. அதேபோல, ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் வெளிப்புற அழகைக் காட்டிலும் உள்ளார்ந்த அழகே முக்கியமானது. விலை உயர்ந்த ஆடைகள் நம்மை அழகுபடுத்தலாம். ஆபரணங்கள் நம்மை அலங்கரிக்கலாம். உலகத்தின் பாராட்டுகள் நம்மை உயர்த்திக் காட்டலாம். ஆனால், கர்த்தருக்குப் பயப்படும் இருதயமும், தீமையை விட்டு விலகும் பரிசுத்தமான வாழ்க்கையும் இல்லையென்றால், தேவனுடைய பார்வையில் அந்த வெளிப்புற அழகு வெறுமையாகிவிடும். ஒருவன் கர்த்தருக்குப் பயந்து வாழும்போது, அந்த தேவ பயம் அவனுடைய உள்ளத்தை நிரப்புகிறது. தீமையை விட்டு விலகும்போது, அவனுடைய வாழ்க்கையில் பரிசுத்தம் உருவாகிறது. அந்த பரிசுத்தமே அவனுடைய குணநலன்களுக்கு அழகாகவும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வலிமையாகவும் மாறுகிறது. மனிதர்களின் கண்களுக்கு நாம் எப்படி தெரிகிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல. தேவனுடைய கண்களுக்கு நாம் எப்படி தெரிகிறோம் என்பதே உண்மையான கேள்வி.

அன்புக்குரியவரே, வெளி உலகில் அழகாகவும், ஆடம்பரமாகவும் தெரியும் நாம், கர்த்தருக்கு முன்பாக வெறும் உலர்ந்த எலும்புகளாக இருக்கிறோமா? அல்லது கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகி, அவரால் நேசிக்கப்படத்தக்க ஆவிக்குரிய அழகும் பரிசுத்தமும் நிறைந்தவர்களாக இருக்கிறோமா? உங்கள் வாழ்க்கையின் வெளிப்புற அழகை மட்டும் அல்ல; உங்கள் உள்ளத்தின் அழகையும் கர்த்தர் காண்கிறார்.

எனவே, “கர்த்தாவே, என் எலும்புகளுக்கு ஊன் தந்தருளும்; என் உள்ளத்திற்கு உயிர் தந்தருளும்; உமக்குப் பயந்து, தீமையை விட்டு விலகி வாழும் பரிசுத்தமான இருதயத்தைத் தந்தருளும்” என்று ஒவ்வொரு நாளும் நம்மை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக் கொடுத்து வாழ்வோம்.

ஜெபம்

1. அருட்பணியை தங்கள் ஜெபத்தாலும் பொருளாதார உதவிகளாலும் தாங்கும் பங்காளர்களுக்காக…

2. அருட்பணி பங்காளர்களின் குடும்பங்களில் கர்த்தரின் சமாதானம் நிலைத்திருக்க…

3. பங்காளர்களின் உதவிகள் வாயிலாக சந்திக்கப்படும் ஆத்துமாக்கள் மெய்யான மனம் திரும்புதலை காண அதன் பலனை அருட்பணி பங்காளர்கள் குடும்பங்கள் அனுபவிக்க…

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878