கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டவர்கள்
“பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.”
— எரேமியா 1:10
எதிர்காலம் சிறக்க வேண்டுமானால், தற்போதைய தவறான நிலையை அசைக்கத் துணிய வேண்டும்.
- Catherine Booth
இன்று நாம் வாழும் காலத்தில் தவறுகளைக் காணாதது சகிப்புத்தன்மை என்றும்,
உண்மையைப் பேசாதது ஞானம் என்றும்,
கண்டும் காணாதது போல் விலகிச் செல்வது சமாதானம் என்றும் பலர் நினைக்கிறார்கள்.
ஆனால் வேதாகமம் மௌனத்தை அல்ல, பொறுப்பை கற்பிக்கிறது. தீமையை ஏற்றுக்கொள்வது அல்ல, சத்தியத்தை நிலைநாட்டுவது உண்மையான வாழ்வு என்பதை கர்த்தர் எரேமியாவுக்கு கற்றுக் கொடுக்கிறார்.
நான் சிறுபிள்ளையாய் இருக்கிறேன் என்ற எரேமியாவுக்கு உலகத்தை மாற்றுவதற்குரிய அதிகாரத்தை கொடுத்தார்.
சமுதாயம் நம்மை தாழ்ந்தவர்களாக கருதினாலும் மற்றவர்களுக்கு முன்பாக நாம் ஒன்றும் இல்லாதவர்களாக இருந்தாலும் கர்த்தரால் ஏற்படுத்தப்படும் போது நாம் வல்லமை மிக்கவர்கள் என்பதை உணர வேண்டும்.
சாக்குப் போக்கு சொல்வதை கர்த்தர் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை, மோசே, கிதியோன், எரேமியா போன்றவர்கள் சாக்குபோக்குகளை சொன்னாலும் கர்த்தர் அவர்களை தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற தைரியப்படுத்தினார். அவர் நம்மை அபிஷேகம் பண்ணுகின்ற போது அதற்கு பாத்திரவான்களாய் நடப்பதற்கு நம்மை ஒப்புவிப்பதே அவர் எதிர்பார்க்கும் செயல்.
பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் கர்த்தர் நமக்குத் தந்திருக்கின்ற அதிகாரத்தை எப்படிப்பட்ட சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பதை அவருடைய சமூகத்தில் காத்திருந்து தைரியத்தோடு செயல்படுத்துவோம்.
ஜெபம்
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் நமது அருட்பணிகளுக்காக ஜெபிப்போம்.
நடைபெற்று வரும் ஆலய பணி வெகு விரைவில் நிறைவு பெற்று பிரதிஷ்டை செய்யப்படவும்,
மக்கள் சுதந்திரமாய் கர்த்தரை ஆராதிக்கும் சூழல் உருவாகவும் ஊக்கமாய் ஜெபிப்போம்