எழுப்புதலின் இதயத் துடிப்பு – தேவனுடைய வார்த்தை
“ஜனங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டுக் கூடி… நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரும்படி கேட்டார்கள்.”
— நெகேமியா 8:1
"அடிக்கடி பயன்படுத்தப்பட்டு தேய்ந்துபோன வேதாகமம், பொதுவாக சிதைந்து போகாத வாழ்க்கைக்குச் சொந்தமானது."- Charles H. Spurgeon
"ஒரு எழுப்புதல் எப்போதும் தேவனுடைய வார்த்தையிலிருந்தே ஆரம்பமாகிறது."
உண்மையான ஆவிக்குரிய மறுமலர்ச்சி இசையாலும் நிகழ்ச்சிகளாலும் அல்ல; தேவனுடைய வார்த்தைக்கான தாகத்தால் தொடங்குகிறது.
நமது தமிழகத்தில் தொடங்கப்பட்ட மிகப்பெரிய மிஷனரி இயக்கங்களின் தொடக்கம் அவற்றின் தரிசனத் தலைவர்கள் எழுந்தது, துதி ஆராதனைகளுக்கும் பரவச கூட்டங்களுக்கும் சென்று அல்ல,
கர்த்தருடைய வார்த்தையை வல்லமையாய் பிரசங்கித்த அருட்பணி தலைவர்களின் தரிசனம் மிக்க செய்தியை கேட்டு மட்டுமே.
நெகேமியாவின் நாட்களில் மக்கள் ஆசீர்வாதங்களை அல்ல, ஆண்டவரின் வார்த்தையையே தேடினர். அந்தத் தாகம்தான் அவர்களின் வாழ்க்கையையும், குடும்பங்களையும், தேசத்தையும் மாற்றியது.
இன்று நாமும் தேவனுடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுத்தால், குழப்பம் தெளிவாகும்; பலவீனம் பலமாகும்; நம்பிக்கையின்மை விசுவாசமாகும். வேதாகமத்தை வாசிக்கும் வீடு நிலைத்திருக்கும்; அதில் வாழும் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒளியாக இருக்கும்.
"தேவனுடைய வார்த்தைக்காக ஏங்கும் இருதயங்களில்தான் தேவனுடைய மகிமை வெளிப்படுகிறது."
"உம்முடைய வார்த்தை என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." (சங்கீதம் 119:105)
தேவனுடைய வார்த்தையை நேசிப்போம்; அதன்படி வாழ்வோம்; அதன்மூலம் உலகை ஒளிரச் செய்வோம்.
ஜெபம்
ஆராதனை வீரர்கள் என சொல்லிக்கொண்டு வாலிபர்களை திசை திருப்பும் நபர்களின் மாயையான கூட்டத்தில் விட்டில் பூச்சிகளாய் சென்று மடியும் சபைகளின் வாலிபர்கள் வசனத்திற்கு திரும்ப வசனத்தை உலகமெங்கும் அறிவிக்கின்ற தலைவர்களாய் மாற ஜெபிப்போம்