படைத்தவரின் பரிவை பறைசாற்றும் பூக்கள்
“காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்...”
— லூக்கா 12:27
பூக்களின் மலர்ச்சியில் தேவனின் பரிவு தெரிகிறது; அவற்றின் அமைதியில் அவரது பராமரிப்பு ஒலிக்கிறது. பூவின் மணம் காற்றில் பரவுவது போல, தேவனின் மாறாத அன்பு இந்த அகிலமெங்கும் பரவியிருக்கிறது.
இயேசு கிறிஸ்து, மனிதர்கள் யாரும் கவனிக்காத காட்டுப்பூக்களைக் காட்டி, பிதாவின் பிரம்மாண்டமான பராமரிப்பைப் பற்றி நமக்குக் கற்றுக்கொடுத்தார்.
மனிதக் கண்கள் மறந்துபோகும் இடங்களிலும், தேவனின் கண்கள் விழித்திருக்கின்றன என்பதை பூக்கள் சத்தமில்லாமல் அறிவிக்கின்றன.
1. பராமரிக்கும் கரங்களை வெளிப்படுத்தும் பூக்கள்
காட்டுப்பூக்கள் யாராலும் விதைக்கப்படுவதுமில்லை, மனிதர்களால் நீரூற்றப்படுவதுமில்லை, வேலி அடைத்துப் பாதுகாக்கப்படுவதுமில்லை.
இருந்தாலும் அவை தங்களுக்குரிய காலத்தில் அத்தனை அழகோடு மலர்கின்றன.
மனித உதவி இல்லாத இடத்தில் தெய்வீக பராமரிப்பு செயல்படுகிறது என்பதை அவை காட்டுகின்றன. இன்று நம் வாழ்க்கையிலும் பல கதவுகள் மூடப்பட்டிருந்தாலும், நம்மை பராமரிக்கும் தேவனின் கரங்கள் ஒருபோதும் மூடப்படுவதில்லை.
2. பேரன்பின் அழகை வெளிச்சமிடும் பூக்கள்
இஸ்ரவேலின் மாபெரும் ராஜாவான சாலொமோனின் ராஜமகிமையையும், அவரது ஆடை அலங்காரங்களையும் மிஞ்சும் ஒரு பேரழகை, தேவன் ஒரு சாதாரண காட்டுப் பூவுக்கு அளிக்கிறார்.
காலையில் பூத்து, மாலையில் உதிர்ந்து போகும் ஒரு தற்காலிக பூவுக்கே இத்தகைய ராஜ அலங்காரத்தை அளிக்கும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தால் மீட்டுக்கொண்ட நம்மை எவ்வளவு அதிகமாக நேசிப்பார்?
பூக்களின் அழகு, படைத்தவரின் அன்பின் ஆழத்தை வெளிச்சமிடுகிறது.
நீங்கள் தேவனின் பார்வையில் அற்பமானவர்கள் அல்ல; மிகவும் விலையேறப்பெற்றவர்கள்.
3. பதற்றமில்லா வாழ்க்கையைப் போதிக்கும் பூக்கள்
பூக்கள் நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படுவதில்லை; புயல் வருமா, வெயில் சுடுமா என்று அஞ்சுவதுமில்லை. இன்று கிடைத்த வெளிச்சத்திலும், பனித்துளியிலும் திருப்தியடைந்து, அவை புன்னகையோடு மலர்கின்றன.
மனிதனின் வீண் கவலைகள் வாழ்வைச் சோர்வடையச் செய்கின்றன; ஆனால் தேவனை நம்பும் விசுவாசம் நம்மை பூவைப் போல மலரச் செய்கிறது.
பூக்கள் வார்த்தைகளால் அல்ல, தங்கள் வாழ்வால் நமக்கு ஒரு உன்னதப் பாடத்தைக் கற்பிக்கின்றன "நாளைக்காகக் கவலைப்படாதே; உன்னை வனைந்த தேவன் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்."
அன்புக்குரியவர்களே
காட்டுப்பூக்கள் ஒரு சாதாரண படைப்பு அல்ல; அவை தேவனின் பராமரிப்பின் உயிருள்ள பிரசங்கங்கள்.
அவற்றின் ஒவ்வொரு இதழும், ஒவ்வொரு நிறமும், ஒவ்வொரு மணமும் ஒரே செய்தியை அறிவிக்கின்றன:
"பூவை மலரவைத்த கரம், நம் வாழ்க்கையையும் மலரவைக்க வல்லது."
"காட்டுப்பூக்களை மறக்காத தேவன், தம் பிள்ளைகளின் கண்ணீரையும் ஒருபோதும் மறப்பதில்லை.
ஜெபம்
பலவித கவலைகளால் மனம் துவண்டு கிடக்கின்ற மக்களுக்கு படைத்து பராமரிக்கும் ஒருவர் உண்டு என்கின்ற நம்பிக்கை விதையை விதைப்பதற்கு அருட்பணியாளர்கள் எழும்ப ஜெபிப்போம்.