பூமியை விசாரித்துக் கேள்
“பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்.”
— யோபு 12:8
"பூமி தேவனின் பாதச்சுவடு; அதை கவனமாக நோக்கும் கண்கள் படைப்பாளரின் மகிமையைக் காணும்."
யோபு தனது வேதனையின் மத்தியில் ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறார். தேவனைப் பற்றி அறிந்துகொள்ள மனித ஞானத்தை சார்ந்திருக்க வேண்டியதில்லை; நாம் வாழும் இந்தப் பூமியே ஒரு திறந்த வேதமாக நமக்கு முன்பாக விரிந்து கிடக்கிறது. அதன் ஒவ்வொரு துகளும் படைத்தவரின் கையெழுத்தைத் தாங்கி நிற்கிறது.
அதன் ஒவ்வொரு நிகழ்வும் தேவனின் வல்லமையையும், கிருபையையும், உண்மைத்தன்மையையும் அறிவிக்கிறது.
1. உயிர்த்தெழுதலை உணர்த்தும் பூமி
மண்ணுக்குள் புதைக்கப்படும் விதை அழிவதற்காக அல்ல; புதிய வாழ்க்கையை வெளிப்படுத்துவதற்காக. மனிதக் கண்களுக்கு அது முடிவாகத் தோன்றலாம்; ஆனால் பூமி அதை ஒரு புதிய துவக்கமாக மாற்றுகிறது. இருளுக்குள் மறைக்கப்பட்ட விதை துளிராகி, செடியாகி, மரமாகி, ஏராளமான கனிகளைத் தருகிறது.
அதனால்தான் ஆண்டவர் இயேசு, " கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்; செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்" (யோவான் 12:24) என்று கூறினார்.
சிலுவை மனிதர்களுக்குப் தோல்வியாகத் தெரிந்தது; ஆனால் அது உயிர்த்தெழுதலின் வாசலாயிற்று.
பூமி தினமும் நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்: தேவனுடைய கரங்களில் புதைக்கப்படும் எதுவும் அழிவதில்லை; அது உரிய காலத்தில் புதிய மகிமையோடு வெளிப்படும்.
2. உபகாரத்தை உரைக்கும் பூமி
ஒரு விவசாயி ஒரு விதையை விதைக்கிறான்; ஆனால் அறுவடைக் காலத்தில் நூறு மடங்கு பெறுகிறான். மனிதன் கொடுப்பது சிறியது; தேவன் திருப்பித் தருவது பெரிது. பூமி வெறும் மண்ணல்ல; அது தேவனுடைய தாராள குணத்தின் சாட்சியாக நிற்கிறது.
"பூமி தன் பலனைக் கொடுத்தது; தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்" (சங்கீதம் 67:6).
நாம் விதைக்கும் சிறு விசுவாசம், சிறு ஜெபம், சிறு அர்ப்பணிப்பு, சிறு கண்ணீர் இவற்றை தேவன் ஆசீர்வாதமாக மாற்றுகிறார்.
பூமி நமக்குக் கற்றுத்தரும் பாடம்: தேவனிடம் விதைக்கப்படுவது ஒருபோதும் வீணாகாது.
3. உறுதியை உணர்த்தும் பூமி
பூமி மேலும் ஒரு பாடத்தைப் போதிக்கிறது. விதைத்தவுடன் அறுவடை வருவதில்லை.
காத்திருப்பு உண்டு. பொறுமை உண்டு. பருவங்கள் கடக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். காலம் நிறைவேற வேண்டும்.
அதுபோல தேவனுடைய வாக்குத்தத்தங்களும் உடனடியாக நிறைவேறாமல் இருக்கலாம். சில நேரங்களில் ஜெபங்கள் பதிலில்லாததுபோல் தோன்றலாம். ஆனால் பூமி நமக்கு நினைவூட்டுவது என்னவென்றால், தேவனுடைய கால அட்டவணையில் தாமதம் இருக்கலாம்; தவறு இருக்காது.
மனிதன் மண்ணிலிருந்து தோன்றி மண்ணுக்கே திரும்புகிறான். தலைமுறைகள் மாறுகின்றன. உலகத்தின் மகிமைகள் மறைகின்றன. ஆனால் இவையனைத்தையும் தாங்கி நிற்கும் தேவன் மட்டும் மாறாதவராக இருக்கிறார்.
பூமி வெறும் உயிரற்ற பொருள் அல்ல; அது தேவனுடைய மகிமையைப் பறைசாற்றும் மௌனப் பிரசங்கி. அதன் ஒவ்வொரு விதையும் உயிர்த்தெழுதலைப் பேசுகிறது. அதன் ஒவ்வொரு அறுவடையும் உபகாரத்தைப் பேசுகிறது. அதன் ஒவ்வொரு பருவமும் உறுதியைப் பேசுகிறது.
அன்புக்குரியோரே கர்த்தரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் பூமி மனிதனின் சுயநலத்தால் பாழாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பூமியை பண்படுத்தவும் பாதுகாக்கவும் பொறுப்பை மனிதன் கையில் கொடுத்தார். மனிதன் அதை அழித்து தன் சுயநலத்தை வெளிப்படுத்துகிறான்.
ஜெபம்
கர்த்தரின் படைப்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் பூமியை பாழ்படுத்தும் சமூகத்திற்கு கர்த்தரின் மகத்துவத்தை பூமியின் வாயிலாக கற்றுக் கொடுக்க திருச்சபைகளும் மிஷனரி இயக்கங்களும் முன்வர ஜெபிப்போம்