ஜீவஒளி: இருளை வெல்லும் இறைவனின் வெளிச்சம்
“மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.”
— யோவான் 8:12
நம்முடைய வாழ்க்கைப் பயணம் சில நேரங்களில் திசைதெரியாத அடர்ந்த காட்டைப் போல மாறிவிடுவதுண்டு. கவலை, பயம், பாவம், மற்றும் குழப்பங்கள் என்னும் இருள் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்போது, "அடுத்த அடி எங்கே வைப்பது?" என்ற திகைப்பு நமக்குள்ளே எழுகிறது. இந்த இருண்ட சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்று கம்பீரமாய் முழங்கினார்.
ஒளியும் இருளும் சமமான எதிரிகள் அல்ல. எவ்வளவு அடர்ந்த இருளாக இருந்தாலும், ஒளியின் ஒரு சிறு கதிர் அதை முற்றிலுமாய் அழித்துவிடும். அதைத்தான் யோவான், "இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை ( யோவான் 1: 5) என்று பிரகடனப்படுத்துகிறார்.
பற்றிக்கொள்ளவில்லை' என்ற வார்த்தைக்கு, பிடிக்க முடியவில்லை, 'விழுங்க முடியவில்லை' அல்லது 'புரிந்துகொள்ள முடியவில்லை' என்று பொருள்.
ஒளியை இருளால் கிரகிக்கவோ, கட்டுப்படுத்தவோ, சிறைபிடிக்கவோ முடியவில்லை." சாத்தான், பாவம், மரணம் என்ற இருளின் உச்சகட்ட சக்திகள் அனைத்தும் சிலுவை என்ற இருண்ட மலையில் இந்த ஒளியை அணைக்க முயன்றன. ஆனால், கல்லறையின் இருளைக் கிழித்துக் கொண்டு இந்த ஒளி உயிர்த்தெழுந்தது.
ஆம், உலகத்தின் பாவ இருளால், கிறிஸ்துவின் தெய்வீக ஒளியை ஒருபோதும் வீழ்த்தவும் முடியாது, அதன் ஆழத்தை அளவிடவும் முடியாது.
நான் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன்" என்று இயேசு கூறும்போது, அவர் ஒரு வழிகாட்டியாகத் தன்னை அறிவிக்கவில்லை; மாறாக, இருளின் எல்லையை முடிவுக்குக் கொண்டுவரும் பேரரசராகத் தன்னை வெளிப்படுத்துகிறார்.
அந்த ஜீவ ஜீவ ஒளியை பின்பற்றி அவருக்கு பின்னால் செல்வதே நமது வாழ்வின் சரியான பாதையாக இருக்கும்.
ஆதி ஒளியே! என் சுயத்தின் இருள் உமது பிரசன்னத்தில் உருகட்டும். உமக்கு முன்பாக என் நிழல்கள் மறைய, உம் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் சிறு வெளிச்சமாக நான் மாற எனக்கு உதவி புரியும் என்கின்ற வேண்டுதலோடு அவருக்குப் பின் செல்வோம்.
இருளில் தடுமாறும் ஏராளமான ஜனங்கள் உண்டு அவர்களுக்கு கிறிஸ்து என்னும் ஒளியை கொண்டு செல்லும் கருவிகளாக நாம் மாறுவோம்.
இருளில் வாழும் ஜனங்கள் பேரொளியைக் காண நம்மால் இயன்றதை செய்வோம்.
கிறிஸ்துவை உங்களுக்கு முன்பாக ஒளியாக கொண்டு நடவுங்கள்; அப்போது உங்கள் பலவீனங்களின் இருள் உங்களை ஒருபோதும் பயமுறுத்தாது."
— டி. எல். மூடி