பயத்தின் நடுவே சமாதானம்
“வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.”
— யோவான் 20:19
கொரி டென் பூம் (Corrie ten Boom) எனும்
நாஜி முகாமின் கொடுமைகளை வென்ற விசுவாச வீராங்கனை குறிப்பிடும்போது:
"பயம் என்பது நாளைய தினத்தின் துக்கத்தைக் காலியாக்குவதில்லை, மாறாக இன்றைய தினத்தின் பெலனை மட்டுமே அது பறித்துக்கொள்கிறது. தேவனுடைய கரத்தில் உங்கள் எதிர்காலம் இருக்கும்போது, தெரியாத எதிர்காலத்தைக் குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. என சொல்கிறார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின், சீஷர்கள் யூதர்களுக்குப் பயந்து, கதவுகளைப் பூட்டிக்கொண்டு அச்சத்தோடு அமர்ந்திருந்தார்கள். எதிர்காலம் குறித்த பயமும், குழப்பமும் அவர்களை ஆட்கொண்டிருந்தது.
அந்தப் பயத்தின் நடுவே, உயிர்த்தெழுந்த இயேசு பூட்டப்பட்ட கதவுகளையும் தாண்டி அவர்கள் நடுவே வந்து நின்று, “உங்களுக்குச் சமாதானம்” என்றார்.
அந்த சமாதானத்தின் விளைவு மூன்று நிலைகளை நமக்கு உணர்த்துகிறது
1. சூழ்நிலையைத் தாண்டிய சமாதானம்:
சீஷர்கள் நடுவே இயேசு வந்தபோது புயல் போன்ற சூழ்நிலை மாறவில்லை, ஆனால் அவர்களின் பயம் மாறி சமாதானம் வந்தது.உலகம் தரும் சமாதானம் சூழ்நிலையைப் பொறுத்தது. ஆனால், கிறிஸ்து தரும் சமாதானம் புயலை நிறுத்துவது மட்டுமல்ல; புயலின் நடுவிலும் நம் இதயத்தை அமைதிப்படுத்துவது.
2. பூட்டப்பட்ட கதவுகளுக்குள்ளும் சமாதானம்: இன்று நம் வாழ்வில் இருக்கும் பயம், நோய், தோல்வி, எதிர்காலக் குழப்பம் போன்ற பூட்டப்பட்ட கதவுகளையும் தாண்டி இயேசுவால் நம்மிடம் வர முடியும். நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று சொன்ன கிறிஸ்துவின் சமாதானம் நம்மை ஆட்கொள்ளும் விசுவாசமே முக்கியம்.
3. பயம் சாட்சியாக மாறும்:
அன்று பயந்து ஒளிந்திருந்த சீஷர்கள், இயேசு தந்த சமாதானத்தாலும் பரிசுத்த ஆவியின் வல்லமையாலும் உலகையே மாற்றிய சாட்சிகளாக மாறினார்கள். மனிதர்களால் திறக்க முடியாத கதவுகளுக்குள் இயேசு வர முடியும். இன்று நமது பயங்களின் நடுவிலும் அவர் நின்று சொல்கிறார்:
உங்களுக்குச் சமாதானம்.”
ஜெபம்
பலவித குழப்பங்களோடும் சமாதானமின்மையாலும் வாடும் குடும்பங்கள் கிறிஸ்துவின் சமாதானத்தை காண,
சமாதானத்தைக் கூறி கிறிஸ்துவின் நாமத்தை அறிவிக்கும் அருட்பணியாளர்கள் மெய்யான சமாதானத்தை இந்த உலகில் பரவச் செய்ய ஜெபிப்போம்.