இரைச்சலின் நடுவில் அருட்பணிக்கு அழைக்கும் கர்த்தரின் சத்தம்
வேதப் பகுதி: 1 இராஜாக்கள் 19:11-18
“இதயத்தின் அமைதியில் தான் கடவுள் பேசுகிறார்; கேட்பதே ஜெபத்தின் தொடக்கம்- Mother Teresa
உலகம் இன்று பலவிதமான இரைச்சல்களால் நிறைந்துள்ளது. பயம், தோல்வி, கவலை, சோர்வு போன்றவற்றின் நடுவில் இறைவனின் குரலைக் கேட்க முடியாமல் நாம் திணறுகிறோம்.
எலியாவும் இதே நிலையில் இருந்தார். யேசபேலின் மிரட்டலால் பயந்து, சோர்ந்து, “என் ஜீவனை எடுத்துக்கொள்ளும்” என்று கதறிய அவருக்கு, கடவுள் ஒரு ஆழமான பாடத்தைக் கற்றுத்தந்தார்.
பெருங்காற்றிலும் இல்லை, பூமி அதிர்ச்சியிலும் இல்லை, அக்கினியிலும் இல்லை; அமைதியான மெல்லிய சத்தத்தில்தான் கர்த்தர் பேசினார்.
எலியா தன் உள்ளத்தின் இரைச்சலை அமைதிப்படுத்தியபோதுதான் அந்த குரலைக் கேட்க முடிந்தது.
அதுபோல, நம் வாழ்க்கையின் குழப்பங்களையும் உலக இரைச்சல்களையும் ஒதுக்கி, அமைதியில் கர்த்தரின் சந்நிதியில் அமரும்போது, அவருடைய குரல் தெளிவாக நமக்குக் கேட்கும்.
அந்த மெல்லிய சத்தம் எலியாவை தேற்றியது மட்டுமல்ல; அவரை மீண்டும் அருட்பணிக்காக எழுப்பியது. “நீ தனியாக இல்லை” என்று உறுதியளித்து, ராஜாக்களையும் தீர்க்கதரிசிகளையும் அபிஷேகம் பண்ணும் புதிய பொறுப்புகளையும் நம்பிக்கையையும் கடவுள் அளித்தார்.
இன்றும் நம் வாழ்க்கையில் சோர்வு மற்றும் பயத்தின் இரைச்சல்கள் இருந்தாலும், கர்த்தரின் மெல்லிய சத்தம் நம்மை தேற்றி, “எழுந்து போ, உனக்காக இன்னும் பெரிய திட்டம் என்னிடத்தில் இருக்கிறது” என்று அழைக்கிறது.
உலகத்தின் இரைச்சலைவிட, இறைவனின் மெல்லிய சத்தத்திற்கே செவிகொடுப்போம். ஆமென்.
ஜெபம்
பல்வேறு சோர்வுகளாலும் கவலைகளாலும் முடங்கி வேதனையில் வாடும் மக்கள் கர்த்தரின் சத்தத்தை கேட்க அருட்பணிகளுக்காக தங்களை அர்ப்பணிக்க ஜெபிப்போம்