பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள்…
“பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து....... பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.”
— அப்போஸ்தலர் 1:8
பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் வரும்போது வெறும் உணர்வுகளை மட்டும் தருவதில்லை; சாத்தானின் கோட்டைகளைத் தகர்க்கும் தெய்வீக பெலனைத் தருகிறார்.”
— டி. எல். மூடி (D. L. Moody)
ஆம் பரிசுத்த ஆவியானவர் தரும் பெலன் என்பது சாத்தானின் கோட்டைகளை தகர்த்து கிறிஸ்தவ விசுவாசத்தில் நாம் முன்னேறிச் செல்ல நமக்கு உதவுகிறது.
இயேசு கிறிஸ்து தன் சீஷர்களுக்கு அளித்த உன்னத வாக்குத்தத்தம் பரிசுத்த ஆவியானவரின் வருகை ஆகும்.
பயத்திலும் குழப்பத்திலும் இருந்த சீஷர்களை, தைரியமுள்ள சாட்சிகளாக மாற்றியதே இந்த தெய்வீக வல்லமைதான்.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நமது சுய சக்தியால் ஆனது அல்ல; தேவனுடைய ஆவியானவர் நமக்குள் செயல்படும்போதுதான் நாம் பலவீனத்தை பெலனாகவும், கலக்கத்தை தெய்வீக சமாதானமாகவும் மாற்றி, விசுவாசத்தில் நிலைத்திருக்க முடியும்.
மனித ஞானத்தால் சாத்தியமில்லாத காரியங்களை இந்த தேவ வல்லமை நமக்குள்ளிருந்து செய்து முடிக்கிறது.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது வெறும் தனிப்பட்ட ஆசீர்வாதம் மட்டுமல்ல, அது கிறிஸ்துவை உலகிற்கு அறிவிப்பதற்கான உன்னத வல்லமை.
அன்று எருசலேம் முதல் பூமியின் கடைசி எல்லை வரை சுவிசேஷம் பரவியது போல, இன்று நம் குடும்பம், சமூகம் மற்றும் உலகிற்கு கிறிஸ்துவின் அன்பை எடுத்துச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு.
எனவே, நமது வார்த்தை, செயல், அன்பு என வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கிறிஸ்துவை வெளிப்படுத்தி, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடு பெலனடைந்த சாட்சிகளாய் இவ்வுலகில் ஒளியாகப் பிரகாசிப்போம்.
ஜெப விண்ணப்பம்.
மிட்டப்பள்ளி பணித்தளத்தில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் ஆலயத்திற்க்காக ஜெபிப்போம். வெகு விரைவில் ஆலயம் அழகாக கட்டி முடிக்கப்படவும், தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.