உடனிருந்து தேற்றும் தேற்றவாளன்
“நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.”
— யோவான் 14:16
நம் வாழ்வில் மிகவும் வேதனையான தருணம் தனிமை. நம்முடைய கண்ணீரையும் வேதனையையும் புரிந்துகொள்ள யாரும் இல்லாத நிலை மனதை உடைத்துவிடுகிறது. ஆனால் இந்த உலகம் நம்மை தனிமைப்படுத்தினாலும், ஆண்டவர் நம்மை ஒருபோதும் தனியாக விடுவதில்லை.
தம்முடைய சீடர்கள் கலங்காதபடி, அவர்களுடன் என்றும் இருப்பதற்காக இயேசு “வேறொரு தேற்றரவாளன்” ஆகிய பரிசுத்த ஆவியானவரை அறிமுகப்படுத்தினார். அவர் நம்மை ஆறுதல்படுத்தி, வழிநடத்தி, கற்றுக்கொடுத்து, வாழ்வில் சமாதானத்தையும் நம்பிக்கையையும் தருகிறார்.
பரிசுத்த ஆவியானவர் நம்முள் வாசம் செய்கிற தேவனின் பிரசன்னம். மனிதர்கள் விலகினாலும், சூழ்நிலைகள் மாறினாலும், அவர் நம்மை ஒருபோதும் விட்டு அகலமாட்டார்.
அவர் சத்தியத்தின் ஆவி.
பொய்கள் நிறைந்த உலகத்தில் உண்மையை உணர்த்துபவர் அவர்.
குழப்பமான பாதைகளில் சரியான வழியை காட்டுபவர் அவர்.
பலவீனமான நேரங்களில் தைரியம் ஊட்டுபவர் அவர்.
கண்ணீர் நிறைந்த சூழல்களில் ஆறுதல் தருபவர் அவர்.
தேற்றரவாளன் ஆகிய பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருக்கிறார் அவர் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துவார் என்கின்ற நம்பிக்கையோடு விசுவாச வாழ்வில் முன்னேறிச் செல்வோம்.
ஜெப விண்ணப்பம்,
ஒரிசா மாநில அருட்பணிகளுக்காக ஜெபிப்போம். அருட்பணியாளர்கள், விசுவாசிகள் அனைவரின் பாதுகாப்புக்காகவும் கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற ஆலயங்கள் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு தடையின்றி பிரதிஷ்டை செய்யப்படவும் இன்னும் ஏராளமான ஆத்மாக்களை ஆண்டவரின் மந்தையில் சேர்க்கவும் ஜெபிப்போம்.