விண்ணேற்றம்: மனித மாண்பு விண்ணைத் தொட்ட திருநாள்
“இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.”
— அப்போஸ்தலர் 1:9
இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றம் என்பது ஒரு பிரிவின் முடிவு அல்ல, அது ஒரு எல்லைகளற்ற புதிய உடனிருப்பின் தொடக்கம். ஒரு மனிதராக இந்த மண்ணில் வாழ்ந்தபோது இடத்தாலும் காலத்தாலும் கட்டுப்பட்டிருந்த ஆண்டவர், விண்ணேற்றம் அடைந்ததன் மூலம் எல்லைகளைக் கடந்து நம் ஒவ்வொருவரின் சுவாசத்திலும், இதயத் துடிப்பிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
கிறிஸ்து விண்ணுலக அரியாசனத்தில் அமர்ந்த இந்த உன்னத நிகழ்வு, நான் போய் உங்களுக்கான இடத்தை ஆயத்தம் பண்ணுவேன் என்ற நம்பிக்கை வாக்குத்தத்தின்படி மனித இனம் இறைவனின் மாட்சியில் பங்குபெற முடியும் என்பதற்கான அழியாத சாட்சியாகும்.
அவர் நமக்காகப் பரிந்து பேசும் தலைமை குருவாக விண்ணகத்தில் வீற்றிருந்தாலும், தூய ஆவியின் வழியாக இன்றும் நம்மோடு பயணிக்கிறார்.
"ஏன் வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்ற வானதூதர்களின் கேள்வி, கடவுளை விண்ணில் மட்டும் தேடாமல், நம் கண்முன்னே வாடும் மனக்குலத்திற்கு நற்செய்தியை சொல்ல வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
இயேசு , நம் வழியாக இந்த உலகில் அன்பையும் நீதியையும் நிலைநாட்டவே விரும்புகிறார்.
விண்ணகத்தந்தையின் அரியாசனத்தில் வீற்றிருக்கும் அமைதியின் அரசரின் மாறாத அமைதியும் ஆசீர்வாதமும் நம் அனைவர் மீதும் நிலைத்திருப்பதாக.
அருட்பணி பங்காளர்கள் அனைவருக்கும் இனிய விண்ணேற்றப் பெருவிழா நல்வாழ்த்துகள்.