பூட்டிய கதவுகளைக் கடந்தும் வரும் சமாதானம்
பயத்தால் அடைக்கப்பட்ட கதவுகள்…
குழப்பத்தில் மூழ்கிய இதயங்கள்…
அந்த இருளான அறைக்குள், தடைகள் எதையும் பொருட்படுத்தாமல்
அவர் வந்து
முதலில் சொன்ன வார்த்தை:
“உங்களுக்குச் சமாதானம்.” (யோவான் 20:26)
சூழ்நிலைகள் நம்மைச் சுற்றி சுவர்களை எழுப்பும்,
தோல்விகள் கதவுகளை பூட்டும்,
பயம் நம்மை தனிமையில் அடைத்து விடும்.
ஆனால், நம் ஆண்டவர் சுவர்களைக் காண்பதில்லை;
அவர் நம் இதயத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் பாரத்தைத் தான் காண்கிறார்.
பூட்டிய கதவுகள் வழியாக அவர் வந்த அந்த தருணம்,
ஒரு ஆழமான உண்மையைச் சொல்கிறது
உங்கள் வாழ்க்கை எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும்,
உங்கள் விடுதலையை யாராலும் முடக்க முடியாது.
மனிதர்கள் பூட்டும் கதவுகள்,
அவரின் வருகைக்கு ஒருபோதும் தடையல்ல.
இன்று உங்கள் பயங்களின் நடுவிலும்,
உங்கள் போராட்டங்களின் மத்தியில்,
அவர் அமைதியாக வந்து நிற்கிறார்…
அவர் தரும் சமாதானம்,
கண்ணீரை ஆறுதலாக்கும்,
கவலைகளை நம்பிக்கையாக்கும்,
இருளை ஒளியாக மாற்றும்.
கதவுகள் திறக்கப்பட வேண்டிய அவசியமே இல்லை,
அவரின் பிரசன்னமே புதிய தைரியத்தை தரும்.
நாமே கதவுகளை திறந்து தைரியமாய் வெளியே வருவோம்.
பூட்டிய கதவுகளுக்குள் இருந்து விடுதலை பெற முடியாமல் ஏங்கி நிற்கும் ஒரு கூட்டம் உலகில் உண்டு அவர்களும் நற்செய்தியை அறிந்து கொள்ள, சமாதானத்தை கூறி நற்செய்தி அறிவிக்கின்ற ஊழியக்காரர்கள் திருச்சபைகளிலிருந்து எழும்ப ஜெபிப்போம்.
மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டிக்குள்ளே இருந்தார்கள், தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான், கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
யோவான் 20:26