தழும்புகளின் தரிசனம்
கதவுகள் மூடியிருந்தும் ஒளியாய் நீர் வந்தீர்,
காயங்களை காட்டி ஐயத்தை நீக்கினீர்.
ஆணித் தழும்புகளில் விரல் வைக்க அழைத்தீர்,
அன்பின் ஆழத்தை எங்கள் உள்ளத்தில் பொறித்தீர்.
அதிகாரத் தோரணையில் நீர் தோன்றவில்லை,
அடிபட்ட காயங்களையே அடையாளமாக்கினீர்.
உம் விலாவில் உள்ள அந்தத் தழும்புகள்,
உடைந்த உள்ளத்திற்கு ஆறுதலாய் ஆனது.
கண்டதனால் அல்ல, கருணையால் மீட்கப்பட்டோம்.
காலமெல்லாம் உம் பாதம் தஞ்சமென
உடல் சிலிர்த்து, உள்ளம் உருகிப் பணிகின்றோம்.
" என் ஆண்டவரே! என் கடவுளே! " எனப் போற்றுகின்றேன்.
உடைந்த இதயத்தில் உறைவதற்கே வந்தீர்,
உம் தழும்புகளால் எம்மை குணமாக்கினீர்.
சிந்தனைக்கு
கர்த்தர் நம்மை அழைப்பது நம்முடைய காயங்களையும் பலவீனங்களையும் பார்த்து தான்.
நாம் மறைக்க நினைக்கும் வலிகளே, அவருடைய கருணைக்கு வாயிலாக மாறுகின்றன.
ஆகவே நம் சுமைகளை அவரிடம் ஒப்படைப்போம்.
அவர் தம் தழும்புகளால் நம்மை ஆற்றுவார்.
காயப்பட்டோரை காயம் கட்ட, கருணை கடவுளுடன் அவர்களையும் ஒன்றிணைக்கும் கருணையின் பணிக்கு கர்த்தர் நம்மை அழைக்கின்றார் அதுவே நம் வெற்றியுள்ள வாழ்வு.