கனப்படுத்தும் கர்த்தர்
“அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன், ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.”
— சங்கீதம் 91:15

ஒரு காலத்தில் வனாந்திரங்களில் ஆடுகளின் நடுவில் தனிமையாக நின்ற ஒரு இளைஞர் தாவீது
கர்த்தர் அவருக்காக ஒரு ராஜசிங்காசனத்தை ஆயத்தப்படுத்தியிருந்தார், தாவீதைப் பொறுத்தவரை அவருடைய குடும்பத்தில் ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீதின் தலையில் கர்த்தர் சாமுவேலின் மூலமாக அபிஷேக எண்ணெயை ஊற்றினார். அந்த நிமிடத்தில் ஒரு மேய்ப்பனின் தலையில் ராஜாவின் அபிஷேகம் இறங்கியது.ஆனால் அபிஷேகத்திற்குப் பிறகு அரியணை உடனே வரவில்லை.
அபிஷேகத்திற்குப் பிறகும் சில காலம் ஆட்டுமந்தைக்குப் பின்னால் தான் வாழ்வு. வெற்றிக்குப் பிறகு வனாந்தரம் வந்தது, புகழுக்குப் பிறகு சவுலின் ஈட்டி வந்தது,
ராஜாவின் வாக்குறுதிக்குப் பிறகு குகையின் இருள் வந்தது, ஒருநாள் கோலியாத்தின் முன் நின்று வெற்றி பெற்ற தாவீது, பின்னர் தன் உயிரைக் காப்பாற்ற குகைகளில் ஒளிய வேண்டிய நிலைக்கு வந்தார். தன்னைத் துரத்திய சவுல் இன்னும் அரியணையில் இருந்தார்; ஆனால் தேவன் தாவீதுக்கு ராஜ்யத்தை வாக்களித்திருந்தார்.எவ்வளவு வித்தியாசமான காட்சி, ஒருபுறம் சவுலின் அரண்மனை; மறுபுறம் தாவீதின் குகை. ஒருபுறம் சவுலின் கிரீடம்; மறுபுறம் தாவீதின் கண்ணீர். ஆனால் குகையில் இருந்த தாவீதின் தலையில் ஏற்கனவே தேவனுடைய அபிஷேகம் இருந்தது. இறுதியில் காலம் மாறியது. குகையில் ஒளிந்திருந்த தாவீது, அரியணையில் அமர்ந்தார். அவரைத் துரத்தியவர்கள் இருந்த இடத்தில், அவரைக் கனப்படுத்திய தேவனுடைய சாட்சி எழுந்தது. ஆடுகளை மேய்த்த கரங்கள், ஒரு தேசத்தை ஆளும் செங்கோலைப் பற்றின.
கண்ணீரால் நனைந்த கண்கள், ராஜ மேன்மையைப் பார்த்தன. அதனால்தான் தாவீது தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து,
“என் சத்துருக்களுக்கு முன்பாக எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.” சங்கீதம் 23:5
என்று பாட முடிந்தது.
அன்பானவர்களே, இன்று உங்கள் வாழ்க்கையும் ஒரு குகையைப் போலத் தோன்றலாம். கதவுகள் மூடப்பட்டிருக்கலாம். எதிரிகள் சூழ்ந்திருக்கலாம். கண்ணீர் இருக்கலாம். ஆனால் குகை உங்கள் முடிவு அல்ல, தாவீதின் குகைக்குள் இருந்த தேவன், அவரை அரியணைக்கு அழைத்துச் சென்றார். அதே தேவன் இன்று உங்களோடும் இருக்கிறார். மனிதர்கள் உங்களை மறந்தாலும், தேவன் உங்களை மறக்கவில்லை. மனிதர்கள் உங்களைத் தாழ்த்தினாலும், தேவன் உங்களைத் தூக்க வல்லவர். எதிரிகள் உங்களைச் சூழ்ந்தாலும், கர்த்தர் உங்கள் முன்னால் பந்தியை ஆயத்தப்படுத்த வல்லவர். ஆபத்தில் நம்மோடு இருப்பவர் கர்த்தர்;
நம்மைத் தப்புவிப்பவர் கர்த்தர்; எதிரிகளின் கண்களுக்கு முன்பாகவே நம்மைக் கனப்படுத்துகிறவரும் கர்த்தரே. குகையைப் பார்த்து சோர்ந்துபோகாதீர்கள்; உங்கள் அபிஷேகத்தை நினைத்துக்கொள்ளுங்கள். குகை தற்காலிகம்; தேவனுடைய வாக்குத்தத்தம் நிலையானது. உங்கள் கண்ணீருக்குப் பின்னால், கர்த்தர் ஆயத்தப்படுத்திய கனத்தின் நாள் இருக்கிறது.