சத்தியத்தைப் பேச தைரியப்படுவோம்
“நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.”
— எரேமியா 1:7
பொய் உலகத்தைச் சுற்றி வலம் வந்து முடிப்பதற்குள், உண்மை தன் காலணிகளைக் கூட அணிந்திருக்காது.
— சார்ல்ஸ் ஸ்பர்ஜன்
போலியான வாக்குறுதிகளாலும், கவர்ச்சியான பேச்சுக்களாலும், திசைதிருப்பும் தவறான போதனைகளாலும் , சமூக ஊடகங்களின் வதந்திகளாலும் நிறைந்திருக்கின்ற உலகில் நாம் பேசும் சத்தியத்தை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளுமா? என்கிற தயக்கமும் பயமும் நமக்குள்ளும் எழக்கூடும்.
ஆனால், தேவன் எரேமியாவிடம் மக்கள் உன்னைக் கேட்பார்களா? என்று கேட்கவில்லை, நான் சொல்வதை நீ பேசு என்று மட்டுமே கட்டளையிட்டார்.
எரேமியா தேவ சத்தியத்தைப் பறைசாற்றியபோது அவருக்குக் கிடைத்தது பாராட்டு அல்ல; அவமானமும், நிராகரிப்பும், சிறைவாசமுமே.
ஒருகட்டத்தில் வேதனை தாங்காமல், "இனி நான் அவர் நாமத்தைப் பேசவே மாட்டேன்" என்று கூட எண்ணினார்.
ஆனால் என்ன ஆயிற்று?தேவனுடைய வார்த்தை அவரது எலும்புகளில் அடைக்கப்பட்ட எரியும் அக்கினியைப் போல இருந்தது அவரால் அமைதியாக இருக்கவே முடியவில்லை (எரேமியா 20:9).
சத்தியத்திற்காக நிற்பது என்றால், சில நேரங்களில் நாம் தனியாக நிற்க வேண்டியிருக்கும். ஆனால் தேவனுக்காகத் தனியாக நிற்பது, உலகத்தோடு நிற்பதை விட மேலானது
— ஏ.டபிள்யூ. தோஸர் (A.W. Tozer)
தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது இந்த உலகத்தின் கைதட்டலையோ பாராட்டையோ அல்ல; அவரது சத்தியத்தைத் தைரியமாக அறிவிக்கும் கீழ்ப்படிதலை மட்டுமே
உலகம் செவிகொடுக்க மறுத்தாலும், சூழல்கள் எதிராய் இருந்தாலும், கர்த்தர் கட்டளையிட்டதை அஞ்சாமல் பேசுகிறவர்களே அவரது உண்மையான சாட்சிகள்.
நம் வாயில் வார்த்தைகளை தருவது அவர் பேசுவது நமது கடமை சத்தியத்தை சத்தியமாய் பேசும் சபைகள் எழும்ப வேண்டுமானால் நம்மில் இருந்து மாற்றம் தொடங்கட்டும்.
அநீதியைக் கண்டு அமைதியாக இருப்பதுவே அநீதிக்குச் செய்யும் ஒத்தாசையாகும். பேசாமல் இருப்பதும் ஒரு பேச்சுதான்
— டீட்ரிச் போன்ஹோஃபர் (Dietrich Bonhoeffer)
ஜெபிப்போம்.
UCMSI அருட்பணி இயக்கத்தின் சார்பில் செய்யப்படும் அனைத்து அருட்பணிகளுக்காக,
அருட்பணி தேவைகள் சந்திக்கப்பட
அருட்பணியை ஆதரிக்கும் பங்காளர்கள் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட
அருட்பணிகளுக்காய் ஜெபிக்கும் ஜெப வீரர்கள் இன்னும் அதிகமாய் உருவாக