இரட்சகரை கண்டோம்
“பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு, 'நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே' என்றான்.”
— யோவான் 1:45
"கிறிஸ்தவம் ஒரு கருத்தியல் அல்ல; உயிருள்ள கிறிஸ்துவுடனான சந்திப்பே அது."
— Pope Benedict XVI
இயேசு கிறிஸ்துவை அனுபவிக்கும் விதம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம்.
அவருடைய காலத்திலேயே சிலர் அவரை தீர்க்கதரிசி என்றார்கள்; சிலர் புரட்சியாளர் என்றார்கள்; சிலர் கலகக்காரர் என்றார்கள்; சிலர் பிசாசு பிடித்தவர் என்றார்கள்; சிலர் அற்புதங்களைச் செய்கிறவர் என்றே பார்த்தார்கள்.
ஆனால், பிலிப்பு இயேசுவில் ஒரு சாதாரண மனிதனைக் காணவில்லை. தலைமுறைகள் முழுவதும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த வாக்குத்தத்த மேசியாவையும், உலகின் இரட்சகரையும் கண்டார். அதனால் தான், "கண்டோம்" என்ற உறுதியான சாட்சியோடு அவர் நாத்தான்வேலை அழைத்தார்.
மோசேயின் நியாயப்பிரமாணத்தில் முன்னறிவிக்கப்பட்டவரும், தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியவரும் இயேசு கிறிஸ்துவே என்பதை அவர் துணிவோடு அறிவித்தார்.
இன்றும் மனிதர்கள் கிறிஸ்துவை பல்வேறு கோணங்களில் அணுகுகிறார்கள்.
சிலர் தேவைகளை நிறைவேற்றுகிறவராகவும், சிலர் நோய்களை குணமாக்குகிறவராகவும், சிலர் பிரச்சினைகளைத் தீர்க்கிறவராகவும், சிலர் ஆசீர்வாதங்களை வழங்குகிறவராகவும் மட்டுமே அவரைத் தேடுகின்றனர்.
திருச்சபை உலகிற்கு தெளிவாக அறிவிக்க வேண்டிய மையச் செய்தி ஒன்றே இயேசு கிறிஸ்து உலகத்தின் ஒரே இரட்சகர்.
அவருடைய பிறப்பில் தூதர்கள் அறிவித்ததும் அவர் இரட்சகர் என்பதையே "இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்."(லூக்கா 2:10–11)
அவருடைய பாடுகளும் சிலுவை மரணமும் மனிதகுலத்தின் பாவ மீட்பிற்காகவே நிகழ்ந்தன.
"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்; நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்."( ஏசாயா 53:5)
அன்புக்குரியவர்களே..
நாம் இயேசுவை உலக ஆசீர்வாதங்களின் ஆதாரமாக மட்டுமல்ல, நம்முடைய தனிப்பட்ட இரட்சகராக அறிந்துகொள்ள வேண்டும். பிலிப்புவை போல உறுதியுடனும் தைரியத்துடனும்,
"இரட்சகரை கண்டோம்!"
என்று உலகிற்கு அறிவிப்போம்.
நாம் பெற்ற இரட்சிப்பின் மகிழ்ச்சி நம்முடைய வார்த்தைகளில் மட்டுமல்ல, வாழ்க்கைச் சாட்சியிலும், அன்பின் செயல்களிலும், அருட்பணிகளிலும் வெளிப்படட்டும். அப்பொழுது நம் வாழ்க்கையே உலகிற்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தும் உயிருள்ள நற்செய்தியாக மாறும்.
ஆண்டவர் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக..