படைத்தவரின் வல்லமையைப் பறைசாற்றும் பறவைகள்
யோபு 12:7 – "ஆகாயத்துப் பறவைகளைக் கேள்; அவைகள் உனக்கு அறிவிக்கும்."
சிறிய பறவைகளே எனக்கு மிகச் சிறந்த போதகர்கள். மாலையில் மரக்கிளையில் அமர்ந்து, தன் தலையைச் சிறகுகளுக்குள் புதைத்துக்கொண்டு, 'நாளைக்கான கவலை இறைவனுடையது' என்று அவை நிம்மதியாகத் தூங்குகின்றன."-மார்ட்டின் லூதர்
பறவைகள் வெறும் உயிரினங்கள் அல்ல; அவை படைப்பாளரின் வல்லமையை வெளிப்படுத்தும் உயிருள்ள சாட்சிகள். மனிதன் கண்டுபிடித்த எந்தத் தொழில்நுட்பமும் இல்லாமல், ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் பறந்து சரியான இடத்தை அடைகின்றன. அவற்றின் ஒவ்வொரு சிறகடிப்பும், "என் பின்னால் ஞானமுள்ள படைப்பாளர் ஒருவர் இருக்கிறார்" என்று அறிவிக்கிறது.
1. பறவைகள் படைப்பாளரின் வல்லமையை அறிவிக்கின்றன
அவற்றின் உடலமைப்பு, வழிகாட்டும் திறன், பருவகாலப் பயணம் அனைத்தும் தற்செயலின் விளைவு அல்ல; மகா ஞானமுள்ள தேவனின் கரத்தின் சான்றுகள்.
2. பறவைகள் தேவனுடைய பராமரிப்பை அறிவிக்கின்றன
இயேசு கூறினார்: "காகங்களைக் கவனித்துப் பாருங்கள்" (லூக்கா 12:24). அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை; இருந்தும் தேவன் அவற்றைப் போஷிக்கிறார். பறவைகளின் கீதம், தேவனுடைய பராமரிப்பின் மேல் உள்ள அமைதியான நம்பிக்கையின் கீதமாகும்.
3. பறவைகள் விசுவாசத்தின் பாடத்தை அறிவிக்கின்றன
பறவைகள் நாளைய உணவைப் பற்றிக் கவலைப்படாமல், இன்றைய கிருபையில் வாழ்கின்றன. அதுபோல விசுவாசியும் கவலையில் அல்ல, கர்த்தரின் வாக்குத்தத்தத்தில் வாழ அழைக்கப்படுகிறான்.
"பறவைகளைப் பாருங்கள்; அவை தேவனுடைய வல்லமையை அறிவிக்கின்றன.
அவற்றைக் கவனியுங்கள்; தேவனுடைய பராமரிப்பை அறிவிக்கின்றன.
அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; விசுவாசத்தின் வாழ்க்கையை அறிவிக்கின்றன."
வானில் பறக்கும் ஒவ்வொரு பறவையும், "உன்னைப் படைத்தவர் உன்னை மறக்கவில்லை" என்ற தேவனின் அமைதியான செய்தியை நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. கவலைகளை விடுத்து, படைத்தவரின் வல்லமையிலும் பராமரிப்பிலும் முழு நம்பிக்கை வைப்போம்.
பரிசுத்தரின் மகிமையை பறைசாற்றும் பறவைகளைப் போல பரமனின் நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்றுவோம்