Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
9 ஜூன் 2026 செவ்வாய் பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

இயேசுவே கிறிஸ்து

“அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால்,...”

— அப்போஸ்தலர் 18:28

அப்பொல்லோ வெறும் உணர்ச்சிப்பூர்வமாக கிறிஸ்துவை குறித்து பேசவில்லை; மாறாக, வேதவாக்கியங்களின் ஆதாரங்களைக் கொண்டு இயேசுவே வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா (கிறிஸ்து) என்பதை யூதர்களுக்கு நிரூபித்தார்.

யூதர்கள் பல நூற்றாண்டுகளாக கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மோசே, தாவீது, ஏசாயா, மீகா போன்ற தீர்க்கதரிசிகள் அறிவித்த மேசியாவை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

ஆனால் அந்த மேசியா தங்களுக்குள் மனிதனாக வந்தபோது, அவரை அறியவில்லை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

அவர்கள் கிறிஸ்துவை எதிர்பார்த்தார்கள்; ஆனால் இயேசுவை நிராகரித்தார்கள்.

இயேசு செய்த அற்புதங்கள், அவருடைய பரிசுத்த வாழ்க்கை, நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள், சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய அனைத்தும் அவர் தான் கிறிஸ்து என்பதை வெளிப்படுத்தின.
இருந்தும் பலர் தங்கள் மத பாரம்பரியம் மற்றும் கடின இருதயத்தால் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனால்தான் அப்பொல்லோ, பழைய ஏற்பாட்டின் வேதவாக்கியங்களை எடுத்துக்காட்டி, “நீங்கள் எதிர்பார்க்கும் கிறிஸ்துவும், நாசரேத்து இயேசுவும் வேறு வேறு நபர்கள் அல்ல; இயேசுவே அந்த கிறிஸ்து” என்று வல்லமையுடன் விளக்கினார்.

இன்றும் பலர் இயேசுவை ஒரு நல்ல மனிதர், ஒரு தீர்க்கதரிசி, ஒரு போதகர் என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் வேதாகமம் அறிவிப்பது அதைவிட உயர்ந்த உண்மையைத் தான்: இயேசுவே கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன், உலகத்தின் இரட்சகர்.

கிறிஸ்துவை எதிர்பார்த்த யூதர்களைப் போல நாமும் சில நேரங்களில் தேவனுடைய செயல்களை எதிர்பார்த்துக்கொண்டு, நமக்கு முன்பாக நிற்கும் இயேசுவை கவனிக்காமல் விடக்கூடாது.

விசுவாசத்தின் மையம் ஒரு கொள்கை அல்ல, ஒரு மதம் அல்ல, “இயேசுவே கிறிஸ்து” என்ற உண்மையாகும்.

“கிறிஸ்துவை அறிதல் என்பது ஒரு புதிய சத்தியத்தைக் கற்றுக்கொள்வது அல்ல; எல்லா சத்தியங்களின் நிறைவேறுதலாகிய இயேசுவை அறிதலாகும்.”

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டில் மறைந்திருக்கிறது; புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டில் வெளிப்பட்டிருக்கிறது. வேதாகமத்தின் மையப்புள்ளி இயேசுவே.

ஆகவே நமது அறிக்கையும், வாழ்வின் சாட்சியும் இதுவாக இருக்கட்டும்:
“இயேசுவே கிறிஸ்து; அவர் ஒருவரே உலகத்தின் இரட்சகர்.” (அப்போஸ்தலர் 4:12)

ஜெபம்

இயேசுவே உலக இரட்சகர் என்பதை இவ்வுலகம் அறிந்து கொள்ள நற்செய்தி பணிச்செயும் அனைத்து மிஷனரி இயக்கங்களுக்காகவும் மிஷனரிகளுக்காகவும் கிறிஸ்துவை ஆண்டவர் என்பதை பறைசாற்றும் அனைத்து திருச்சபைகளுக்காகவும் ஜெபிப்போம்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878