Share
UCMSI United Christian Missionary Society of India Bethania Campus, Pattanam, Coimbatore, Tamil Nadu – 641016 | +91 94886 89878 | www.ucmsi.org
30 மே 2026 சனி பெந்தெகொஸ்தேக்குப் பின் காலம்

கிறிஸ்துவை போல அருட்பணி செய்ய அழைப்பு

“பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்”

— யோவான் 20:21

இந்த வசனம் ஒரு சாதாரண கட்டளையோ, பொறுப்பின் ஒப்படைப்போ அல்ல; மாறாக, கிறிஸ்துவின் இருதயத்திலிருந்து அவரது சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட தெய்வீகப் பணிக்கான அழைப்பாகும்.

உயிர்த்தெழுந்த ஆண்டவர் தமது சீடர்களின் மத்தியில் நின்று, சமாதானத்தை வழங்கிய பின்னர், அவர்களை உலகிற்குள் அனுப்புகிறார்.

ஆனால் அவர், “நான் உங்களை அனுப்புகிறேன்” என்று மட்டும் கூறவில்லை; “பிதா என்னை அனுப்பினதுபோல” என்று கூறுகிறார்.

அதுவே இந்த அழைப்பின் ஆழத்தையும் உயரத்தையும் வெளிப்படுத்துகிறது.

பிதா, தமது ஒரே குமாரனை உலகிற்கு அனுப்பியபோது, அவர் பரலோக மகிமையைத் துறந்து மனிதராகி வந்தார். மனிதரின் வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார். அடிமையின் ரூபமெடுத்து, சிலுவை மரணம் வரை கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

ஆகவே, கிறிஸ்துவின் சீடர்களாகிய நாமும் சுயநலத்தையும், தற்பெருமையையும், உலக ஆசைகளையும் துறந்து, பிறரின் நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ அழைக்கப்படுகிறோம்.

கிறிஸ்துவைப் போல அர்ப்பணிப்பது என்பது நம்மை நாமே வெறுமையாக்கி, இறைவனின் சித்தத்திற்கு முழுமையாக இடம் கொடுப்பதாகும்.

இதைத்தான் Saint Augustine அழகாகக் கூறுகிறார்:

"இறைவா, நீர் எங்களை உமக்காகவே படைத்தீர்; எங்கள் இதயம் உம்மில் இளைப்பாறும் வரை அதற்கு அமைதி இல்லை."

இயேசுவின் அர்ப்பணிப்பு எந்த நிபந்தனைகளுக்கும் உட்பட்டதல்ல.

அதுபோலவே, கிறிஸ்தவ வாழ்வு என்பது நமது விருப்பங்களை நிறைவேற்றுவதல்ல; இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவதாகும்.

இதை Saint Francis of Assisi அவர்களின் புகழ்பெற்ற வார்த்தைகள் நினைவூட்டுகின்றன:

தேவையெனில் மட்டுமே வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்; மற்றபடி உங்கள் வாழ்வின் மூலமாகவே எப்போதும் கிறிஸ்துவைப் பிரசங்கியுங்கள்.

உலகம் இன்று அதிகமாகக் கேட்பது போதனைகளை அல்ல; உண்மையான அன்பையும் தியாகத்தையும் தான். நமது வார்த்தைகளைவிட நமது வாழ்க்கையே கிறிஸ்துவின் நற்செய்தியை அதிக வல்லமையுடன் அறிவிக்கிறது.

அர்ப்பணிப்புள்ள வாழ்க்கை என்பது நம்மை உலகிற்காக உடைத்துக் கொடுக்கும் வாழ்க்கையாகும்.

இறைவன் நம்மை பெரிய செயல்களுக்காக மட்டுமல்ல, சிறிய செயல்களையும் பேரன்போடு செய்வதற்காக அனுப்புகிறார்.

ஒரு ஆறுதல் வார்த்தை, கருணை பார்வை, உதவும் கை, மன்னிக்கும் இதயம் இவைகளின் வழியாகவே கிறிஸ்துவின் அன்பு உலகிற்கு வெளிப்படுகிறது.

இன்று அறுப்பு மிகுதி வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள்.

உயிர்த்தெழுந்த ஆண்டவர் இன்னும் நம்மைப் பார்த்து, “நான் உன்னை அனுப்புகிறேன்” என்று அழைக்கிறார். அந்த அழைப்பிற்கு பதிலளிக்கும் இதயத்தோடு நாம் கூற வேண்டும்:

ஆண்டவரே, இதோ நான் இருக்கிறேன்; என்னை அனுப்பும்.

நமது வாழ்க்கை கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கும் உயிருள்ள சாட்சியாக மாறட்டும். நமது அர்ப்பணிப்பின் மூலம் உலகம் கிறிஸ்துவின் முகத்தைக் காணட்டும். நாம் செல்லும் இடமெல்லாம் சமாதானமும், அன்பும், நம்பிக்கையும் மலரட்டும். ஆமென்.

தியானம்: Rev. S. Benin Samuel, Executive Director, UCMSI

Vision statement“Spreading the Good news to the unreached and bring them to Light”
Mission fieldsTamil Nadu | Odisha
Manipur | Chhattisgarh
Contact personRev. S. Benin Samuel
Executive Director – 94886 89878