கர்த்தரை காண்பதே மகிழ்ச்சி
“சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.”
— யோவான் 20:20
கர்த்தரை காண்பதுதான் மனிதனின் மிக உயர்ந்த பாக்கியம். அந்தத் தரிசனம் நம் ஆன்மாவிற்குள் என்றும் அழியாத, அளவற்ற சந்தோஷத்தை ஊற்றாகப் பெருகச் செய்கிறது."
— புனித தாமஸ் அக்வினாஸ்
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்குப் பிறகு சீஷர்களின் இதயம் பயத்தாலும் குழப்பத்தாலும் நிரம்பியிருந்தத. அவர்கள் நம்பிக்கை சிதறிப்போயிருந்தது.
ஆனால் உயிர்த்தெழுந்த ஆண்டவர் அவர்கள் நடுவில் வந்து நின்ற அந்த தருணம், அவர்களின் வாழ்க்கையில் இருளை அகற்றி வெளிச்சமாக மாற்றி சந்தோசத்தை காணச் செய்தது.
இன்றும் கவலை, தனிமை, தோல்விகளால் சோர்ந்திருக்கும் மனிதர்களுக்கு உலக சந்தோஷங்கள் நிலையான தீர்வைத் தருவதில்லை.
கர்த்தரைக் காண்பது என்பது கண்களால் பார்ப்பது மட்டுமல்ல; அவருடைய அன்பையும் பிரசன்னத்தையும் ஆழமாக உணர்வதாகும். துயரத்திலிருந்த மரியாள், சோர்ந்திருந்த எம்மாவு சீஷர்கள் என கர்த்தரைக் கண்டவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறியது.
கர்த்தரின் சமூகத்தில் உள்ள உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்த தாவீது அதை வெளிப்படுத்துகின்ற போது
“உம்முடைய சந்நிதியில் பரிபூரண சந்தோஷம் உண்டு.”
(சங்கீதம் 16:11) என்கிறார்.
ஆம் அன்புக்குரியவர்களே கர்த்தரின் சமூகத்தை நாடி தேடுவோம் அவரின் பிரசன்னம் மாத்திரமே நம் வாழ்க்கையில் நீங்காத மகிழ்ச்சியை தரும்.
நாம் சோர்ந்து இருக்கும் போது உண்மையாய் அவரை தேடுவோமாகில் நிலையான மகிழ்ச்சியை நம்மில் உருவாகச் செய்வார்.
அவரை நோக்கிப் பார்த்தவர்களின் முகங்கள் பிரகாசம் அடைந்தது.
தேடுவோம், அவரைக் காண்போம், மகிழ்ச்சியை சொந்தமாக்குவோம்.
ஜெபம்
இன்று முதல் ஆந்திர மாநிலம் தேவராஜபுரம் பணித்தளத்தில் நடைபெறும் விடுமுறை வேதாகம பள்ளி நிகழ்வுகளுக்காக ஜெபிப்போம்